Saturday, December 26, 2009

ஆதி சங்கரர் ஸ்தாபித்த பத்ரிநாத்

இமையத்திலுள்ள தெஹரிகர்வால் மலைத்தொடரின் வழியில் பத்ரிநாத் கோவில் உள்ளது . இந்தக் கோவிலில் பத்ரி நாராயணர் (மகாவிஷ்ணு ) மூர்த்தி ஸ்வரூபமாக காட்சி தருகிறார் . புத்தர் காலத்தில் இந்த பத்ரி நாராயணர் சிலை நாரதர் குளத்தில் வீசப்பட்டது . பல வருடங்களாகக் குளத்தடியில் கிடந்த இந்த மூர்த்தியை ஆதிசங்கரர் கண்டெடுத்து பத்ரிநாத் கோவிலை அமைத்து மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்தார் என்று வரலாறு சொல்லுகிறது . இரண்டு அடி உயரத்தைக் கொண்ட கருங்கல்லால் செதுக்கப்பட்ட பத்ரி நாராயணர் பத்மாசன கோலத்தில் தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் வீற்றிருக்கிறார். அவரது வலப்புறத்தில் உத்தப்பாநார, நாராயண முனிவர்களின் மூர்த்திகள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றன . நாரத முனிவர் மண்டி இட்டு அமர்ந்துள்ள நிலையில் காட்சி தருகிறார். இடப்புறத்தில் குபேரன், விநாயகரின் மூர்த்திகளைப் பார்க்கலாம் . மகாவிஷ்ணுவின் வாகனமான கருட பகவானின் சிலையும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பாகும் .


பத்ரிநாராயனரின் சந்நிதி தங்கம் மற்றும் வெள்ளித் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டு வெகு அழகாக தோற்றமளிக்கிறது. இவ்வாலயத்திலுள்ள கல்சிற்பங்கள் பக்தர்களை வெகுவாக கவர்கின்றன . பிரதான சந்நிதிக்கு சற்றுத் தொலைவில் மகாலஷ்மியின் சந்நிதியும் இடம்பெற்று உள்ளது . அடுத்து ஆதிசங்கரரின் சன்னிதியையும் காணலாம் . பத்ரிநாத் கோவில் மே மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை தறந்து வைக்கப்பட்டிருக்கும் .
அடுத்த ஆறுமாதம் காலத்தில் இந்தக் கோவிலின் பூசாரிகள் ஜோஷிமத்தில் உள்ள நரசிம்மர் கோவிலில் பூஜைகளை தொடர்ந்து செய்கிறார்கள் . ஆறுமாத காலம் கழித்து மீண்டும் பத்ரிநாத் கோவில் திறக்கப்படும்போது , கோவில் மூடப்படுவதற்கு முன் பிரதான சந்நிதியில் ஏற்றப்பட்ட நெய்விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருப்பது இந்தக் கோவிலின் தனிச்சிறப்பாகும் . ஆறுமாத காலமாக மூடிக்கிடக்கும் கோவிலுக்குள் நாரத முனிவர் பத்ரிநாராயனரைப் பூஜித்து தியானத்திலிருப்பதாக புராணங்கள் சொல்லுகின்றன .ஆலகநந்தா நதிக்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் பத்ரிநாத் கோவிலுக்கு சற்று தொலைவில் நாரதர் குலத்தைக் காணலாம் . இந்தக் குளத்தின் அருகே 5 பாறைகளைக் கொண்ட பஞ்சசீலா என்ற இடத்தையும் காணலாம் . இந்த 5 பாறைகளை நாரதர், நரசிம்மர், வராகர் , கருடர், மார்கண்டேயர் என்று சொல்கிறார்கள் . பத்ரிநாத் கோவிலுக்கு எதிர் எதிரே அமைந்துள்ள மலைச் சிகரங்களில் நார, நாராயண முனிவர்கள் தவமிருந்தார்கள் . அதனால் இந்த இரண்டு மலைகளையும் நார மலை என்றும் , நாராயண மலை என்றும் அழைக்கின்றனர். கூர்ம, பிரகலாத , ஊர்வசி , ப்ருகு , இந்திரன் ஆகிய 5 அழகிய நீர்வீழ்ச்சிகளும் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன . சற்று தொலைவில் மணிநாக பர்வதத்தைப் பார்க்கலாம் . யக்ஷனால் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பஞ்ச பாண்டவர்களின் முதல் புத்திரனான தருமர் பதில் அளித்து, சகோதரர்களின் உயிர்களை மீட்டு வந்த பழம்பெருமையைப் பெற்றது இந்த மணிநாக மலை .


பத்ரிநாத்திலிருந்து வடமேற்கு திசை நோக்கி நான்கு கிலோமீட்டர் தொலைவில் வேதவியாசர் குகையை பார்க்கலாம் . இந்தக் குகை , வியாச முனிவர் நான்கு வேதங்களைப் படைத்த பெருமையைக் கொண்டது . இதனை அடுத்து கணேச குகையையும் பார்க்கலாம் . ஸ்கந்த முனிவருக்கு சிவபெருமான் இமயத்தின் சிறப்பை சொன்னதும், ஸ்கந்த முனிவர் ஸ்கந்த புராணத்தைப் படைத்ததுமாகிய வரலாற்றுச் சிறப்பைப் பெற்றது இந்தக் குகை . பத்ரிநாத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் பனிக்கட்டிகளால் உருவாகிய சடோபந்த் ஏரியைப் பார்க்கலாம் . இந்த ஏரியின் அருகே பிரம்மா , விஷ்ணு , மகேஷ்வர் மூவரும் தவமிருந்தனர் என்று புராணங்கள் சொல்லுகின்றன . பத்ரிநாத் கோவிலை அடுத்து ஆதிபத்ரி , விருத்தபத்ரி , பவிஷ்யபத்ரி , யோகத்யான்பத்ரி என்னும் நான்கு பத்ரி கோவில்களும் இடம் பெற்று உள்ளன .


பத்ரிநாத்தில் ஆதி சங்கரர் மடமும் இடம் பெற்று உள்ளது . மடத்தின் இடப்புறத்தில் சிறிய குகை ஒன்றைப் பார்க்கலாம் . இந்தக் குகையில் சங்கராசாரியார் தியானம் செய்ததாகப் புராணங்கள் சொல்லுகின்றன . மடத்தின் வலப்புறத்தில் கற்பகவிருட்சத்தை பார்க்கலாம் . இந்த விருட்சத்திற்குக் கீழேதான் சங்கராச்சாரியார் ஞானம் பெற்றார் என்று கூறப்படுகிறது . சங்கர மடத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அனுமன்சட்டி என்ற இடம் அமைந்துள்ளது . இந்த இடம் வாயு புத்திரர்களாகிய அனுமனும் , பீமனும் தங்களது பலத்தைப் பரிசோதனை செய்த வரலாற்றைப் பெற்றது . இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் வண்ணமயமான பூக்கள் நிறைந்த பூங்காவனத்தையும் பார்க்கலாம் . இந்த வனத்திலிருந்து சிறிது தூரத்தில் ஹேமாகுந்த ஏரியைப் பார்க்கலாம் . இந்த ஏரியின் அருகே சீக்கியர்களின் பத்தாவது குருவான குருகோவிந்த்சிங்க் தியானம் செய்தார் என்கிறார்கள் . இப்படிப்பட்ட வரலாற்று சிறப்பை உடைய பத்ரிநாத் கோவிலின் அழகை ஒரு முறையாவது பார்க்க வேண்டுமில்லையா ?

Thursday, December 24, 2009

பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வைஷ்ணோ தேவி


ஜம்முவினுடைய திரிகூட மலைத்தொடரிலுள்ள குகையில் வைஷ்ணோதேவி கோயில் இடம் பெற்றுள்ளது . அடர்ந்த காடு , பனிமூடிய மலைத்தொடர்களுக்கு நடுவே வைஷ்ணோதேவி கோயில் அமைந்துள்ளது . வைஷ்ணோ தேவியை தரிசிக்க மலையேறும் பக்தர்கள் வழி முழுவதும் " ஜெய் மாதாஜி" என்று பாடிக்கொண்டே ஏறுகிறார்கள் .

மகாவிஷ்ணுவின் மீது பரமபக்தி கொண்ட வைஷ்ணோதேவி , திருமணம் , குடும்பம் அனைத்தையும் துறந்து ஒரு துறவி போல வாழ்ந்தாள். ஆன்மீகத்தில் அதிகமான அக்கறை செலுத்திய வைஷ்ணோதேவி பகவானைத் தேடி ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்தாள். கடைசியில் இறைவனைத் தேடி தேவி திரிகூட மலைத்தொடரை அடைந்தாள் . இறைவனைத் தேடி திரிகூட மலை வழியாக செல்லும் தேவியை மந்திரவாதி பைரோநாத் பார்த்தான் . அவன் தேவியை பின் தொடர்ந்தான் . வழியில் தாகத்தால் தவித்த தேவி , தனுது அம்பால் பூமியை பிளந்தார். பிளந்து கொண்ட பூமியிலிருந்து பானகங்கா நதி உருவெடுத்து தேவியின் தாகத்தை தனித்தாள். சற்று தொலை தூரம் சென்ற தேவி ஒரு இடத்தில் அமர்ந்து இளைப்பாறினார். அந்த இடத்தில் தேவியின் சரணங்கள் பதிந்து காணப்பட்டதால் இன்று மக்கள் அந்த இடத்தை சரண்பாதுகா என்ற பெயரால் அழைக்கிறார்கள் . பைரோநாத் பின் தொடர்வதை அறிந்த தேவி திடீரென்று மலையிலுள்ள "அர்த்தகுவாரி" குகைக்குள்ளே மறைந்து சென்றார் . அந்த குகைக்குள்ளே நுழைந்த தேவி இன்னொரு சிறிய குகைக்குள்ளே அமர்ந்து தியானம் செய்தார் . அந்தச் சிறிய குகை கர்ப்ப கிரகத்தை போல காட்சி தந்தது . இன்று அந்தக் குகையை மக்கள் "கர்ப்பஜூன் " என்று அழைக்கிறார்கள். எப்படிப்பட்ட பருமான மனிதனும் இந்த கர்ப்ப ஜூன் குகையிலிருந்து நுழைந்து செல்லுகிறார்கள். கர்ப்பஜூன் குகையின் வாசலில் வீர், லங்கூர் என்ற இரண்டு காவலாளர்கள் வைஷ்ணோ தேவியை காவல் புரிந்தார்கள் . ஒரு வருடமாக தேவியைத் தேடி அலைந்த பைரோநாத் கடைசியில் வைஷ்ணோதேவி குகைக்குள்ளே தியானத்திலிருப்பதை அறிந்து கொண்டான். குகையை நெருங்கிய பைரோநாத் வீர் , லங்கூர் உடன் கடுமையாக போராடினான். இதை அறிந்த தேவி குகையினுடைய பின்புறத்தை பிளந்து கொண்டு சந்ண்டிரூபத்தில் பைரோநாத் முன் தோன்றினார் .வைஷ்ணோதேவி பைரோநாத் தலையை தனியாக வெட்டி தூக்கி வீசி எறிந்தார்.தேவி தன்னுடைய சரணத்தின் கீழே பைரோநாத்தின் தலையில்லாத உடலை வைத்துக் கொண்டார் .தேவியால் தூக்கி எறியப்பட்ட பைரோநாத்தின் தலை திரிகூட மலை உச்சியில் விழுந்தது . அந்த சிகரத்தை பைரோநாத் சிகரம் என்று அழைக்கிறார்கள். தேவியின் சக்தியை அறிந்த பைரோநாத் தனது குற்றத்தை உணர்ந்து , தேவியிடம் மன்னிப்பு கேட்டான் . அவனுடைய பிரார்த்தனையை மெச்சி பைரோநாத்திற்கு விமோசனம் கொடுத்து, தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் பைரோநாத்தையும் தரிசித்து விட்டு செல்பவர்கள் முழுமையான பலனைப் பெறுவார்கள் என்ற வரத்தை கொடுத்தார்.


குகைக்குள் இருக்கும் பிரதான சன்னதியில் சரஸ்வதி , லக்ஷ்மி , காளிதேவி ஆகிய மூன்று சக்திதேவிகள் கல் வடிவத்தில் காட்சி தருகிறார்கள் . இந்த சக்தி தேவிகளை "பிண்டி " என்று அழைக்கிறார்கள் . இந்த மூன்று தேவிகளும் படைத்தல், ரட்சித்தல், அழித்தல் ஆகிய மூன்று சக்திகளைக் குறிக்கிறார்கள் .இந்தப் பிரதான சந்நிதியில் தேவிகளின் பாதங்களைத் தொட்டுக் கொண்டு ஓடும் பானகங்காவின் சலசல என்ற சப்தம் காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது . 13 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இந்த குகையில் எப்போதும் ஜகஜஎன்று விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கும் . நவராத்திரி சமயத்தில் வைஷ்ணோதேவி கோயிலில் பக்தர்களின் கூட்டத்தைக் காணலாம் . தேவியை தரிசனம் செய்த பக்தர்கள் அக்ரூட், தேங்காய் என்று பிரசாதகமாக வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.

டெல்லியிலிருந்து இரயில் அல்லது பேருந்துகள் ஜம்முக்கு செல்கின்றன . ஜம்முவிலுள்ள "கட்ரா" என்ற இடத்திலிருந்து திரிகூட மலை அடிவாரம் தொடங்குகிறது . மலையேறும் பக்தர்கள் களைப்பை மறக்க தேவியின் பாட்டுக்களைப் பாடிக் கொண்டே செல்கிறார்கள் . வழியில் பானகங்காவில் குளித்து விட்டு பக்தர்கள் தொலைதூரம் சென்று "அர்த்தகுவாரி" குகைக்குள்ளே நுழைகிறார்கள் . அங்கிருந்து "கர்ப்பஜூன் " என்ற சிறிய குகைக்குள்ளே நுழைந்து தேவியை தரிசிக்கும்போது பக்தர்கள் பரவசம் அடைந்து "ஜெய் மாதாஜி ஜெய் மாதாஜி" என்று சத்தத்தோடு சொல்லிக் கொண்டே பிரார்த்தனை செய்கிறார்கள் . சன்னதியை விட்டு இன்னொரு வழியாக வெளியே செல்லும் பக்தர்கள் தேவியினுடைய அம்ரித்குளத்தை தரிசித்து விட்டு செல்கிறார்கள் . அதன் பிறகு பக்தர்கள் செங்குத்தான மலையேறி பைரோநாத்தையும் தரிசித்து விட்டு செல்கிறார்கள் . தேவியின் சன்னதியிலிருந்து வரும் பிரசாதம் கோவிலின் வெளிப்புற கடைகளில் விற்கப்படுகிறது . பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வைஷ்ணோதேவி சக்தியின் மகிமையை அறிந்த அனைவரும் நம்பிக்கையோடு கஷ்டத்தையும் பார்க்காமல் மலையேறி தேவியை தரிசனம் செய்கிறார்கள் .


Wednesday, December 23, 2009

இறை ஞானம் கூட்டும் பஞ்ச கேதார் யாத்திரை

இமயத்திலுள்ள கேதார்நாத், மத்யமகேஷ்வர், துங்கநாத் , கர்பேஷ்வார் , ருத்ரநாத் ஆகிய 5 பெருமைமிக்க சிவஸ்தலங்களை தரிசிப்பதே பஞ்ச கேதார் யாத்திரை எனப்படுகிறது . மகாபாரதப் போரில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் சிவபெருமானை வழிபட கேதார்நாத் வந்தார்கள் . பாண்டர்வர்களைக் கண்ட சிவபெருமான் நந்தியாக உருமாறினார். நந்தி வடிவத்தில் இருந்த சிவபெருமானைப் பாண்டர்வர்கள் அறிந்து கொண்டார்கள். உடனே நந்தி வடிவத்திலிருந்த சிவபெருமான் தனுது கொம்பால் பூமியை பிளந்து மறைவதற்கு முயற்சி செய்தார் . இதனைக் கண்ட பீமன் நந்தியோடு போராடினான் . போராட்டத்தில் நந்தியின் உடலைத் தனித்தனியாக கிழித்து எறிந்தான் . பீமனால் வீசி எறியப்பட்ட நந்தியின் அங்கங்கள் இமயத்தில் 5 இடங்களில் விழுந்தன . அவையே இந்த 5 ஸ்தலங்கள் . மந்தாகினி நதிக்கரையோரத்தில் உள்ள கௌரி குளத்தின் அருகே பிரம்மாண்டமான கேதார்நாத் கோவில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது . இவ்வாலயம் அந்தக் காலத்து கட்டயூரி வடிவமைப்பில் அமைந்துள்ளது . கோவிலின் கூரைகள் தேக்கு மரங்களால் வேயப்பட்டுள்ளது மிகவும் விசேஷமானது . கேதார்நாத்தில் நந்தியின் (சிவபெருமான் ) கழுத்துப் பகுதி விழுந்ததால், கோவிலின் பிரதான சந்நிதியில் நந்தி பகவான் கழுத்து பாகம் வரை மட்டுமே தெரியும் வண்ணம் மிகச் சிறப்பாக காட்சிக் கொடுக்கிறார் .
மத்யமகேஷ்வர் கோவிலில் மக்கள் சிவபெருமானின் வயிற்றுப் பகுதியை வணங்குகிறார்கள் . கேதார்நாத்திலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உகிமத் என்ற இடத்திலிருந்து வடகிழக்கு திசையில் 25 கிலோமீட்டர் தொலைவு சென்றால் குப்தகாசி என்ற இடத்தை அடையலாம் . குப்தகாசியிலுள்ள காளிமத் என்ற இடத்தில் மத்யமகேஷ்வர் கோவில் அமைந்துள்ளது . கோவில் நுழைவாயிலில் நந்தி பகவான் காட்சி கொடுக்கிறார் . அடுத்து சிவபெருமான் பார்வதி தேவியோடு அருள் புரியும் சந்நிதியும் உள்ளது .

உகிமத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில், பத்ரிநாத் செல்லுன் வழியில் துங்கநாத் சிவஸ்தலம் உள்ளது . துங்கநாத் கோவிலில் சிவபெருமான் ஒரு அடி உயரத்தில் கருப்பு நிறமுடைய சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார் . துங்கநாத் கோவிலில் பீமனால் வீசி எறியப்பட்ட நந்தியின் புஜங்கள் விழுந்ததால், இங்குள்ள பிரதான சந்நிதியில் சிவபெருமான் புஜங்களோடு வெகு அழகாக தரிசனம் தருகிறார் . இந்தக் கோவிலில் பார்வதி தேவிக்கு தனிச்சந்நிதி உள்ளது . இந்த இடத்தில்தான் இராவணன் சிவபெருமானை நினைத்து தவம் செய்தான் என்று ராமாயணம் சொல்லுகிறது . நந்தியின் (சிவபெருமானின் ) ஜடை மட்டும் கர்பேஷ்வர் கோவிலில் விழுந்ததால், இங்கு சிவபெருமான் ஜடையோடு தரிசனம் கொடுக்கிறார். இங்கு சிவபெருமான் ஜடாதாரி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார் . கர்பேஷ்வர் கோவில் யுர்கம் என்ற பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது . இந்தக் கோவிலில் பிரதான சந்நிதியில் கருப்பு நிறத்தில் நந்தி பகவான் தரிசனம் கொடுக்கிறார் .

சிவபெருமானின் 5 ஆவது அங்கமான முகம் மட்டும் ருத்ரநாத் கோவிலில் விழுந்ததால் இங்கே அழகிய முகத்தோடு சிவபெருமான் காட்சி கொடுக்கிறார் . இந்தக் கோவிலிலும் சுயம்பு லிங்கம் இடம் பெற்றுள்ளது . இடப்புறத்தில் 5 சிறுய லிங்கங்கள் உள்ளன . வலப்புறத்தில் சரஸ்வதி தேவி சந்நிதி உள்ளது . இது இந்தக் கோவிலின் சிறப்பு அம்சமாகும் . பஞ்சகேதார் யாத்திரை கேதார்நாத்திலிருந்து தொடங்கி மத்யமகேஷ்வர், துங்கநாத் , கர்பேஷ்வர், ருத்ரநாத் என்று 5 சிவஸ்தலங்களை கொண்டது. ருத்ரநாத் கோவிலின் அருகே சூர்யா குளம் , சந்திர குளம் , நட்சத்திரக் குளம் என்று மூன்று விசேஷமான குளங்களில் நீராடலாம் . ருத்ரநாத் கோவிலின்
அருகே வைதாரிணி என்ற நதியும் ஓடுகிறது . மறந்த ஆத்மாக்கள் பூலோகத்திலிருந்து தேவலோகத்திற்கு செல்லும்போது இந்த நதியைக் கடந்து செல்வதாக சொல்கிறார்கள் . பஞ்ச கேதார் யாத்திரை மனதிற்கு அமைதியைக் கொடுத்து, தெளிவான சிந்தனையை வளர்க்கிறது . பாவங்களைப் போக்கி இறை ஞானத்தைக் கூட்டுகிறது . இத்தகைய சிறப்பு அமசங்களைக் கொண்ட பஞ்ச கேதார் சிவஸ்தலங்களைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் .
Tuesday, December 22, 2009

வினை அகற்றும் புண்ணிய புஷ்கரம்


ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீர்த்தத் தலமான புஷ்கரத்தைச் சுற்றி 400 கோயில்கள் உள்ளன. ஒட்டகக் கண்காட்சிக்கும் பிரசத்திப் பெற்றது புஷ்கரம். தீர்த்தக் தலங்களில் புஷ்கரமும் ஒரு முக்கிய இடமாக கருதப்படுகிறது. கார்த்திகைப் பௌர்ணமி அன்று புஷ்கரத்தில் நீராடினால், பல்லாயிரம் யாகங்கள் செய்த பலன் கிட்டும் என நம்பப்படுகிறது.

மலைகளுக்கு நடுவில் இடம் பெற்றுள்ள புஷ்கரத்தில் 52 நீராடும் குண்டங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு குண்டத்தின் தண்ணீரும் ஒவ்வொரு சக்தியைக் கொண்டது. நாக குண்டத்தில் நீராடினால் குடும்பம் செழிக்கும் என்றும்,
ரூப்தீர்த் குண்டத்தில் நீராடினால் அழகின் மெருகு கூடுமென்றும் சொல்லுகிறார்கள் .

கபிலவியாப குண்டத்தில்நீராடினால்குஷ்டரோகம் குணமடையும் என்ற நம்பிக்கையோடு பேரு வியாதிக்காரர்கள் நீராடிச் செல்லுகிறார்கள். மிருகண்டுமுனி குண்டத்தில் நீராடினால் ஞானத்தைப் பெறலாம் என்று சொல்லுகிறார்கள். மேலும் இங்குள்ள தாமரைப் பொய்கையிலிருந்துதான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்லுகின்றன.

பேரண்டத்தைப் படைத்த பிரம்மதேவன் இந்த அழகிய புஷ்கரத்தைப் படைத்தார் என்று பத்மபுராணம் சொல்லுகின்றது. வஜ்ரநாபன் என்ற அரக்கனை தாமரை இதழ்களால் பிரம்மதேவன் வதம் செய்ய முயற்சித்த போது, அவருடைய கைகளில் இருந்து மூன்று தாமரை இதழ்கள் வெவ்வேறு இடங்களில் விழுந்தன . அவ்வாறு விழுந்த இடங்களில் ஆறு கிலோமீட்டர் சுற்றளவுக்கு சுவையான நீர் நிரம்பிய ஏரிகள் உருவாகின. அவ்வாறு தோன்றியவற்றில் ஒன்றுதான் இத்தலத்திலுள்ள ஏரி . தாமரை இதழ்களால் உருவாகிய ஏரிக்கு புஷ்கரம் என்று பிரம்மதேவன் பெயர் சூட்டினார் மறைந்த முன்னோர்களுக்கான ஈமக்கடன்களை இந்த புஷ்கரத்திலுள்ள கயாகுண்டம் என்ற இடத்தில் செய்கிறார்கள்.

இங்கே பிரம்மதேவனுக்கு தனிக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. சிவப்பு கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோவிலின் நுழைவாயிலில் பிரம்மதேவனின் வாகனமான அன்னங்களைக் காணலாம் . கோவிலின் பிரதான சந்நிதியில் காயத்ரியோடு நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவன் காட்சி தருகிறார். இந்தக் கோவிலில் இந்திரன், குபேரன் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன. இங்கே அமைந்துள்ள வராகர் கோவில் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான ஆலயமாகும். இரண்டு அடி உயரமுள்ள திருமேனியோடு வராகப் பெருமான் அருள்புரிகிறார். 1823 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ரகுநாதர் கோவிலையும் புஷ்கரத்தில் பார்க்கலாம் . இந்தக் கோவிலில் வேணுகோபாலன், நரசிம்ஹர் , லக்ஷ்மி ஆகியோர் அருள்புரிகின்றனர். இந்தக் கோவிலருகே வைகுண்டநாதர், லஷ்மி மூர்த்திகலை கொண்ட புதிய ரகுநாதர் கோவிலும் கட்டப்பட்டுள்ளது.

முற்காலத்தில் பிரம்மதேவன் இப்பகுதியில் மாபெரும் யாகத்தை நடத்தினாராம். தம்பதியர்களாக அமர்ந்து யாகத்தை நடத்த வேண்டுமென்பதால், பிரம்மதேவன் தன்னுடைய மனைவி சாவித்ரியை அழைத்திருந்தார். ஆனால் சாவித்திரி குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால், நல்ல நேரத்தை நழுவவிடாமல் இருக்க பிரம்மதேவன் காயத்ரியை மணந்து கொண்டார். தாமதமாக வந்த சாவித்திரி பிரம்மதேவனோடு அமர்ந்து காயத்ரி யாகம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து கோபம் கொண்டு , பூலோகத்தில் இந்த இடத்தைத் தவிர்த்து வேறு எந்த இடத்திலும் பிரம்மதேவனுக்கு கோவிலே இருக்காது என்று சாபம் இட்டுவிட்டு, புஷ்கரத்திலுள்ள ரத்னகிரி மலையின் உச்சியில் சென்று அமர்ந்து கொண்டால். அந்த மலையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சாவித்திரிக்கு ஒரு கோவிலும் கட்டப்பட்டது.

புகழ்பெற்ற நாகா குன்றும் புஷ்கரத்தில் இடம் பெற்றுள்ளது . இந்த நாகா குன்றில் பிரம்மதேவனின் விருப்பப்படி பிருகு முனிவர் யாகத்தை நடத்தினார் . இந்த யாகத்திற்கு பிரம்மதேவனின் பேரனான வது, நாகம் ஒன்றை அனுப்பி வைத்தான் . தன்னுடைய தந்தையின் பக்கத்தில் பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்து கோபம் கொண்ட ரிஷி சயாவன், வதுவைப் பாம்பாகப் பிறக்க வேண்டுமென்று சாபம் கொடுத்தார் . தன்னுடைய தவறை உணர்ந்த வது ரிஷியிடம் மன்னிப்பு கேட்கக் கொண்டான் . இந்தக் குன்றில் சின்ன ஏரியைப் படைத்த பிரம்மதேவன், வதுவை நாகா குன்றில் நிரந்தரமாக இருக்க வேண்டுமென்று அருள் கொடுத்து மறைந்தார் . இத்தகைய புராணச் சிறப்புகள் கொண்ட இயற்கை வளம் நிரம்பிய அழகிய புஷ்கத்தில் நீராட நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

Monday, December 21, 2009

ஹரியோடு இணைய வைக்கும் ஹரித்துவார்


கங்கையின் மேற்குத் திசைக் கரையோரத்தில் இடம் பெற்றுள்ள ஹரித்துவார் தெய்வீக பூமிகளுள் ஒன்று என்று சொல்லலாம் . இமையத்திலிருந்து உருவாகிய கங்கை முதன் முதலில் ஹரித்துவாருக்குள் நுழைகிறாள் . அதனால் ஹரித்துவார் கங்காத்துவார் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அலகாபாத், நாசிக், உஜ்ஜைனி, ஹரித்துவார் ஆகிய நான்கு இடங்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்ப மேலா நடைபெறுகிறது. ஹரித்துவாரில் உள்ள கங்கையில் வைகாசி முதல் தினத்தன்று நீராடுவது மிகவும் விசேஷமாகும். ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் அன்றைய தினத்தன்று கங்கையில் நீராடிச் செல்லுகிறார்கள்.

மகாவிஷ்ணுவின் சரணங்கள் பட்ட இடமான ஹர் -கி -புரி என்ற இடமும் ஹரித்துவாரில் அமைந்துள்ளது . ஹர் -கி -புரியில் கங்கையைப் போற்றும் வகையில் கோயில் ஒன்றும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது . ஒவ்வொரு நாளும் இந்தக் கோயிலில் கங்கா தேவிக்கு சிறப்பான பூஜை நடைபெற்று வருகிறது. இரவு வேளையில் கங்கையில் பல அகல் விளக்குகள் மிதக்கும் அழகிய காட்சி நம்மைப் பிரமிக்க வைக்கிறது. மக்கள் கங்கையில் நீராடுவதற்கு ஹர் -கி -புரி குளம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

ஹர் -கி -புரியிலிருந்து அரைக் கிலோமீட்டர் தொலைவில் சப்தரிஷி ஆஷ்ரமம் ஒன்றைப் பார்க்கலாம். இந்த ஆஸ்ரமம், பஞ்சபாண்டவர்கள் தஞ்சம் அடைந்த காலகட்டத்தில் பாண்டர்வர்களுள் பீமனின் கால்முட்டி பூமியை தொட்டு பீமா குண்டம் என்ற குளத்தை உருவாகிய சிறப்பு வரலாற்றைப் பெற்றது. ஹர் -கி -புரியின் தெற்கு திசையிலிருந்து அரைக் கிலோ மீட்டர் தொலைவில் குஷ்வர்தா குளமொன்றும் உள்ளது . இந்தக் குளத்தின் அருகே தத்ரேயா முனிவர் ஆயிரம் வருடங்களாக ஒற்றைக் காலில் நின்று கடுந்தவம் புரிந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

ஹரித்துவாரின் கிழக்குத் திசையிலுள்ள சிவாலிக் மலை தொடர்களில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் சண்டிதேவி, அஞ்சனா தேவி, கௌரிசங்கர், நீலேஷ்வர் ஆகிய நான்கு கோயில்களைக் காணலாம் . அவற்றையொட்டி புராதனக் கோயில்களான நாராயணசீலா, மாயாதேவி, கோயில்களும் இடம் பெற்று இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஹரித்துவாரின் தெற்குத் திசையிலிருந்து நான்கு கிலோ மீட்டர் கடந்து கங்ககல் என்ற இடத்தைக் காணலாம். இந்த இடத்தில் தகஷ் மகாராஜா மாபெரும் யாகத்தைத் தொடங்கினார். அந்த யாகத்திற்கு மகள் சதியையும், மருமகன் சிவபெருமானையும் மகாராஜா அழைக்கவில்லை. இருந்தாலும் சதி தந்தையின் யாகத்தில் கலந்துகொந்தாள். அதற்கு மகாராஜா சிவபெருமானைப் பற்றி இழிவாக பேசுவதைக் கேட்ட சதி, யாக குண்டத் தீயில் விழுந்து உயிர் நீத்தாள். இந்தச் செய்தியைக் கேட்ட
சிவபெருமான் மகாராஜாவின் தலையைச்சீவி யாககுண்டத் தீயில் தூக்கி எரிய வீரபத்ரனை உருவாக்கினார். வீரபத்ரனும் சிவபெருமானின் கட்டளையை நிறைவேற்றினான். அதற்கு பிறகு பிரம்மதேவனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சிவபெருமான், மகாராஜாவிற்கு மீண்டும் உயிர் கொடுத்தார். யாககுண்டத்தில் தலை முழுமையாக எரிந்துவிட்டதால், சிவபெருமான் ஆட்டுத் தலையைக் கொடுத்தார் என்ற வரலாற்றுப் பெருமையை இந்த இடத்தோடு இணைத்துப் பேசப்படுகிறது.

ஹரித்துவாரிலுள்ள பிர்வபர்வதத்தில் மானசாதேவி கோயிலைக் காணலாம். மனதில் நினைத்ததை நடத்தித் தருபவள் மானசாதேவி என்ற நம்பிக்கையோடு மக்கள் இந்த சக்திதேவியை வணங்குகிறார்கள். பிர்வபர்வதத்தின் உச்சியிலிருந்து ஹரித்துவாரின் அழகைப் பார்த்து ரசிக்கலாம். ஹரித்துவாரிளிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் ரிஷிகேஷ் என்ற இடத்தையும் பார்க்கலாம். அமைதிப் பூங்காவான இந்த இடத்தில் அதிக அளவில் ஆஸ்ரமம் நிறைந்திருப்பதைக் காணலாம். ஆதி சங்கரரால் கட்டப்பட்ட பரத கோயில் ஒன்றும் ரிஷிகேஷத்தில் இடம்பெற்று உள்ளது. இந்த இடத்தில் புகழ்பெற்ற லக்ஷ்மண ஜூலா என்ற இடத்தையும் பார்க்கலாம். ஹரியோடு இணைவதற்கு முதல் நுழைவாயில் என்ற சிறப்பை பெற்ற ஹரித்துவாரைப் பார்க்கச் செல்வது மிகவும் அவசியமானது.


Sunday, December 20, 2009

மனதுக்கினிய மதுரா மாநகர்


கிருஷ்ண பரமாத்மா பிறந்த இடமான மதுரா மாநகரத்தை மக்கள் தெய்வீக பூமியாக கொண்டாடுகிறார்கள் . அங்கு கிருஷ்ணர் வளர்ந்த இடமான பிருந்தாவன் விசேஷமாக குறிப்பிடத்தக்கது . 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகிருஷ்ணரின் பேரன் வஜ்ரநாபன் மதுரா மாநகரத்தில் கேசவா கோயிலைக் கட்டினார். அந்தக் கோயிலின் அருகே சந்திரகுப்த விக்கிரமாதித்ய அரசன் இன்னொரு கிருஷ்ணர் கோயிலைக் கட்டினார். நாளடைவில் வஜ்ர நாபன் கட்டிய கேசவா கோயில் சேதமடைந்தது . விக்கிரமாதித்யன் கட்டிய கோயிலில் இடம் பெற்றுள்ள சிற்பங்களும், ஓவியங்களும் அந்தக்காலத்து மக்களின் மனதைக் கவர்ந்தன. தீடிரென்று முகலாயர்கள் மதுரா மாநகரத்தின் மீது படை எடுத்தார்கள் . அவர்கள் விக்கிரமாதித்யன் கட்டிய கிருஷ்ணர் கோயிலை இடித்து நொறுக்கினார்கள் . மேலும் கோயிலில் இடம் பெற்றிருந்த சிறந்த விலை மதிப்பு மிக்க ஓவியங்களைக் பறித்துச் சென்றார்கள் .
பல ஆண்டுகளுக்கு முன்பு வஜ்ர நாபனால் கட்டப்பட்ட கேசவா கோயில் மீண்டும் புதுபிக்கப்பட்டது. வஜ்ர நாபனால் உருவாக்கப்பட்ட ராதாகிருஷ்ணர் மூர்த்திகளும் புதுப்பிக்கப்பட்டன. கோயிலின் நடுவில் ராதாகிருஷ்ணர் மூர்த்தியும், இடது புறத்தில் சுபத்ரா, ஜகன்னாதர், பலராமர் மூர்த்திகளும், வலது புறத்தில் பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீராமர், லக்ஷமணர் , சீதா, அனுமார் மூர்த்திகளும் வைக்கப்பட்டுள்ளன. கோயிலின் உள்ளே சற்று தள்ளி சிவலிங்கமும், துர்கா தேவியும் காட்சி தருகிறார்கள் . இந்தக் கோயிலின் அருகில் சின்ன சிறை போலக் காட்சி தரும் சன்னதியும் இடம்பெற்றுள்ளது . இந்தச் சிறைச் சன்னதியில் வசுதேவர் தேவகி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கேசவா கோயில் யமுனை நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ளது . கம்சனைக் கொன்ற ஸ்ரீகிருஷ்ணர் இந்த நதியில் நீராடி சற்று இளைப்பாறினார் என்று புராணங்கள் சொல்கின்றன . அதனால் இந்த இடம் விஸ்ராம் காத் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மதுரா மாநகரத்தில் இடம் பெற்றுள்ள சிறிய குன்றில் கிருஷ்ணர் கம்சனைக் கொன்று வென்றார் . அதனால் அந்த இடத்தை மக்கள்' ரங்கபூமி' என்று அழைக்கிறார்கள். அந்தக் குன்றின் உச்சியை 'கம்சதீலா என்ற பெயரால் அழைக்கிறார்கள். குன்றின் பின்புறத்தில் கிருஷ்ணர் உக்கிரசேனனுக்கு மகுடம் சூட்டி மதுரா மாநகரத்தின் அரசனாக்கினார் .

மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி உக்கிரசேனன் சக்தி வாய்ந்த சிவலிங்கம் உள்ள ரங்கம் ஈஸ்வர மகாதேவா கோயிலைக் கட்டினார் . பயில்வான்கள் குத்துச் சண்டையில் வெற்றி பெறுவதற்கு இந்தக் கோயிலுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள் . மதுரா 1814 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பிரசித்திப் பெற்ற துவாரகாதீஷ்வர் கோயிலும் அமைந்துள்ளது.

மதுரா மாநகரத்திலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் பிருந்தாவன் அமைந்துள்ளது . யசோதா கிருஷ்ணரை வளர்த்த இடம் என்ற பெருமையைப் பெற்றது இந்த பிருந்தாவன் . குறிகிய வீதிகளுடைய அழகிய மாநகரமாக காட்சி தருகிறது. இந்த பிருந்தாவனத்தில் சுமார் 5 ஆயிரம் கோயில்கள் இடம் பெற்றுள்ளன . அவற்றுள் சில முக்கியமான கோயில்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம் . கிருஷ்ணர் , பலராமர், ராதா மூர்த்திகலைக் கொண்ட கிருஷ்ண- பலராமர் கோயில் பிருந்தாவனத்தில் குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமிகள் சமாதி பெற்றார் என்பது விசேஷமானது . இந்தக் கோயிலில் அவர் சமாதி பெற்ற சன்னதியும் இடம் பெற்றுள்ளது . 1590 ஆம் ஆண்டில் ஜெய்ப்பூரை ஆண்ட ராஜா மான்சிங்க் என்பவர் மதுரா மாநகரத்தில் கோவிந்த்ஜி கோயிலைக் கட்டினார் . இந்தக் கோயில் பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. கோயில் கதவுகள் வெள்ளித் தகடுகளால் செய்யப்பட்டது. கிருஷ்ணர்ராதா வடிவத்தில் தங்க விக்கிரங்களும் ராஜா மான்சிங்கினால் இந்தக் கோயில் ஸ்தாபனம் செய்யப்பட்டது. அப்போது முகலாயர்கள் படை எடுத்துள்ளதாக செய்தி அறிந்த ராஜா மான்சிங்க் தங்க விக்கிரங்களை தனது மாளிகையில் பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தார் என்றி வரலாறு சொல்கின்றது . 1951 ஆம் ஆண்டில் மறுபடியும் இந்த கோவிந்த்ஜி கோயில் புதுப் பிக்கப்பட்டது . 1590 ஆம் ஆண்டில் ராஜா மான்சிங்கினால் உருவாகப்பட்ட தங்க விக்கிரங்கள் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோயிலில் மீண்டும் வைக்கப்பட்டன.
ஜீவகோஸ்வாமி என்பவர் கிருஷ்ணர் மீது அளவு கடந்த பாசத்தையும் அன்பையும் வைத்திருந்தார் . அவர் ராதா தாமோதர கோயிலைக் கட்டினார் . இந்தக் கோயிலில் கிருஷ்ணரின் சின்ன சின்ன பாதங்கள் பதிந்த திருப்பதைக் காணலாம் . கிருஷ்ணரின் பாதங்களைக் கொண்ட சன்னதியும் இந்தக் கோயிலில் இடம் பெற்றுள்ளது . கோபால்பட் கோஸ்வாமி என்பவர் ராதாரமணர் கோயிலை பிருந்தாவனத்தில் கட்டினார். கோபால்பட் வைத்திருந்த சாலிக் கிராமத்திலிருந்து உருவாகிய ராதாரமணர் மூர்த்திகள் இந்தக் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. வருடா வருடம் வைகாசி மாதத்தில் ராதாரமணர் மூர்த்திகளை 100 லிட்டர் பாலினால் நீராட்டி மக்கள் மாபெரும் விழாவாக கொண்டாடி வருகிறார்கள் . பிருந்தாவனத்தின் அருகே நிதிவன் என்ற இடத்திலிருந்து சுவாமி ஹரிதாஸ் பாகே பிஹாரி மூர்த்தியை கைப்பற்றினார். அவர் 1864 ஆம் ஆண்டில் பாகே பிஹாரி கோயிலைக் கட்டினார் . இந்தக் கோயிலின் பிரதான சன்னதியான பாகே பிஹாரி சன்னதி எப்போதும் திரைச் சீலையால் மூடப்பட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. பாகே பிஹாரியின் அழகை மக்கள் காண்பதற்கு ஒரு நொடியில் திரைசீலை திறந்து மூடப்படும். அக்ஷயதிதியன்று பாகே பிஹாரியின் கமலப் பாதங்கள் திரைச்சீலையின் அடியிலிருந்து மக்கள் கண்டு வணங்கிச் செல்கிறார்கள் .

பிருந்தாவன மாநகரத்தில் புகழ் பெற்ற சேவாகுஞ்ச என்ற இடம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் இரவு வேளையில் கிருஷ்ணரும், ராதையும் காட்சி தருவதாக மக்கள் நம்புகிறார்கள் . மண்ணில் புதைந்த கிருன்ஷ்னரின் புல்லாங்குழலினாள் உருவாகிய குளத்தில் இன்றும் ஸ்ரீகிருன்ஷ்னர் ராதையோடும் மற்ற கோபிகைகளுடனும் விளையாடி மகிழ்வதாக மக்கள் நம்புகிறார்கள் . பகல் வேளையில் குரங்குகள் நிரம்பிய இந்தக் குளத்தில் மக்கள் நீராடிச் செல்கிறார்கள். எவரையும் அந்திப் பொழுதில் இந்த இடத்திற்கு அனுமதிப்பதில்லை . பழமையான கோயில்களைக் கொண்ட மதுரா , பிருந்தாவன் மாநகரத்திற்கு மக்கள் ஒரு முறையாவது சென்று வரவேண்டும்.


துயர் தீர்க்கும் த்வாரகை


ஏழு தெய்வீக பூமிகளுள் துவாரகையும் ஒன்று . 5000 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகிருஷ்ணா பரமாத்மாவை பார்ப்பதற்கு நாரத முனிவர் துவாரகைக்கு வருகை தந்தார் என்று ஸ்ரீமத் பாகவதம் குறிப்பிடுகிறது . வண்ணப் பூக்கள் நிறைந்த பூந்தோட்டங்களும் கூடிய துவாரகையின் அழகு நாரத முனிவரின் கண்களைப் பறிக்குமாறு இருந்தது என்று வரலாறு சொல்கிறது.
தேவலோக சிற்பியான விஸ்வகர்மா, துவாரகையில் கிருஷ்ண பரமாத்விற்காக16 ஆயிரம் மாளிகைகள் கொண்ட மாபெரும் அரண்மனையை உருவாக்கினார் என்று புராணங்கள் சொல்லுகின்றன . இந்த 16 ஆயிரம் மாளிகைகள் ஒவ்வொன்றும் ஸ்ரீகிருஷ்ணரின் ஒவ்வொரு ராணிக்கு என்று அமைக்கப்பட்டன. மாளிகைகலிருந்த பவழ தூண்களும், நவரத்தின கூரைகளும் அந்தக் காலத்தில் பார்த்தவரின் கண்களை வியக்க வைத்தன என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. maanikka கற்கள் பொருந்திய சுவர்கள், முத்துக்கள் தொங்கிய கதவுகள் மாளிகையின் அழகை மேலும் மெருகூட்டின. தங்கம் , வைரம் , மாணிக்கம் , நவரத்தினங்கள் அனைத்தும் பொருந்திய ஸ்ரீகிருஷ்ணரின் மாளிகை துவாரகையில் சொர்க்க லோகமாக காட்சி கொடுத்தது . ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பூலோகத்திலிருந்து மறைந்து போன பிறகு துவாரகையிலுள்ள அவரது மாளிகையும் கடலில் மூழ்கிக் சிதைந்துவிட்டது.

கடலில் மூழ்கிய துவாரகையின் மிச்சமுள்ள பகுதி பெட் துவாரகை என்ற பெயரால் இன்று அழைக்கப்படுகிறது . கடல் நடுவே இடம்பெற்றுள்ள இந்தத் தீவு பழைய துவாரகையின் பகுதி என்று சொல்லப்படுகிறது . பெட் துவாரகையில் துவாரகாதீஷ்வர் என்ற கோயிலைக் காணலாம் . ஸ்ரீகிருஷ்ணரின் பேரன் வஜ்ர நாபன் இந்தக் கோயிலை 16 ஆம் நூற்றாண்டில் கட்டினார் .
துவாரகாதீஸ்வரர் கோயில் இரண்டு வாசல்களை கொண்டு தனிச் சிறப்பை பெற்றது. முதல் வாயிலை மோட்சத் துவாரம் என்றும், இரண்டாவது வாயிலை சொர்க்கத் துவாரம் என்று அழைக்கிறார்கள். நான்கு புஜங்கள் கொண்ட மகாவிஷ்ணு மூர்த்தி, கோயிலின் பிராதன சந்நிதியில் அருள்பாலிக்கிறார். இந்த சன்னதியை ஒட்டி பலராமர் சன்னதியும் உள்ளது. இடது புறத்தில் பிரத்யும்னன், அநிருத்தன் சன்னதிகளும் இடம்பெற்றுள்ளன. சற்று தொலைவில் தேவகியின் சன்னதியும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சக்தி தேவிகளும் இந்தாள் கோயிலில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

துவாரகாதீஸ்வரர் கோயிலில் உயர்ந்த கூரைகளுடைய மேடை ஒன்றைப் பார்க்கலாம். இதனை ஜகத் மந்திர் என்று அழைக்கிறார்கள். விழாக் காலங்களில் நாட்டியமும், சங்கீதமும் இந்த ஜகத் நடைபெறுகின்றன. துவாரகாதீஸ்வரர் கோயிலை அடுத்து சிவபெருமானுக்கு என்று ஒரு கோயிலும் இடம்பெற்று உள்ளது. துவாரகையிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் ருக்மணி தேவி கோயிலை காணலாம். இந்தக் கோயிலில்
இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அழகிய ஓவியமும் மக்களின் கண்களை வியக்க வைக்கின்றன. கிருஷ்ண பரமாத்மாவின் பதினாயிரத்து எட்டு மனைவி ருக்மணி தேவி மீது அபார அன்பு வைத்திருந்தார். முனிவர் துர்வாசகர் கிருஷ்ண பரமாத்மாவையும் ருக்மணி தேவியையும் தனது குடிசையில் சாப்பிடுவதற்கு அழைத்தார். உணவு பரிமாறுவதற்கு முன் ருக்மணி தேவிக்கு தாகம் எடுத்தது. இதை அறிந்த கிருஷ்ண பரமாத்மா ருக்மணி தேவிக்குத் தண்ணீர் கொண்டு வந்தார். தேவி தண்ணீர் குடிப்பதை பார்த்த முனிவர் துர்வாசர் கோபம் கொண்டு சாபம் கொடுத்தார். வருங்காலத்தில் ருக்மணி தேவி கிருஷ்ண பரமாத்மாவோடு இணைந்து காணப்படாமல் தேவிக்கு என்று சற்று தள்ளி தனிச் சன்னதி ஒன்று இடம்பெறும் என்று கோபத்தினால் சொன்ன வார்த்தைகளால் இன்றும் ருக்மணி தேவியின் கோயில் சற்று தொலைவில் இடம்பெற்று உள்ளது.


துவாரகையைச் சுற்றி மற்ற கோயில்களும் இடம்பெற்று உள்ளன . துவாரகாவில் கோமதி நதி கடலோடு கலக்குமிடம் சக்ர தீர்த்த குளம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் சமுத்திர நாராயணர் கோயிலைப் பார்க்கலாம். துவாரகாவில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் நாகேஸ்வர மகாதேவா கோயில் காட்சி தருகிறது. இந்தக் கோயில் பன்னிரண்டு சிவலிங்கங்களை கொண்ட சிறப்பை பெற்றுள்ளது.

பழம்பெரும் வரலாற்றையும் அழகிய கோயில்களையும் கொண்ட துவாரகை இன்றும் அதே சிறப்போடு காணப்படுகிறது. இந்தத் தெய்வீக பூமியை
பார்ப்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

Thursday, June 25, 2009

அயோத்தியில் அழகிய கோயில்கள்


உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள சரயு நதிக் கரையோரத்தில் அயோத்தியா மாநகரம் அமைந்துள்ளது. உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அயோத்தியா மாநகரம் அமைந்துள்ளது . அயோத்தியா " ஸ்ரீராமர் பிறந்த பூமி " என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது . அயோத்தியாவில் இடம் பெற்றுள்ள ஸ்ரீ ராமர் கோயிலருகே மசூதி ஒன்றும் இருந்தது . 15 -ஆவது நூற்றாண்டில் முகலாயர்கள் ஆண்ட காலத்தில் இந்தப் பாப்ரி மசூதி கட்டப்பட்டது என்பது வரலாறு. பெரும் சர்ச்சைக்கு பிறகு 1992 -ஆம் ஆண்டில் இந்த மசூதி இடிக்கப்பட்டது.

அயோத்தியா நுழைந்தவுடன் " குப்தர் காட்" என்ற இடம் உள்ளது . சக்ர ஹர்ஜீ விஷ்ணு எனும் புகழ்பெற்ற கோயில் இந்த இடத்தில் உள்ளது. இந்தக் கோயிலில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களை வர்ணிக்கும் வகையில் சிற்பங்களும், மூர்த்திகளும் அழகாக காட்சி தருகின்றன. இவற்றுள் ஸ்ரீராமமூர்த்தி மிகவும் விஷேசமாக மக்களால் துதிக்கப்படுகிறார். மேலும் ஸ்ரீராமர் பாதங்கள் தொட்ட மண் என்ற சிறப்பால் அவருடைய பாதங்கள் கொண்ட சின்ன சந்நிதியும் இடம் பெற்றுள்ளது .

அடுத்து " ஸ்ரீராமர் ஜென்மஸ்தானம் " என்ற இடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த இடம் ஸ்ரீராமனின் வாழ்க்கை வரலாற்றை வர்ணிக்கும் வகையில் நூறு மூர்த்திகள் கொண்ட சின்ன சின்ன நூறு சந்நிதிகள் கொண்டுள்ளன. இந்த இடத்தை ஒட்டினாற்போல " கனகபவன் " என்ற கோயிலும் இடம்பெற்றுள்ளது . அந்தக் காலத்தில் ஆண்ட அர்ச்சா என்ற அரசனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் "சீதாமஹால் " என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் ஸ்ரீ ராமர் சீதாதேவியின் மூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன.

கனகபவன் கோயிலைத் தாண்டி அறுபது படிக்கட்டுகள் கொண்ட சிறிய குன்றின் மேல் அனுமார் கோயில் ஒன்றுள்ளது. ஆறு அடி நீளத்தில் அமர்ந்த வண்ணம் அனுமார் சிலை வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் காட்சி தருகிறது.

இதனை அடுத்து " லக்ஷ்மன் காட் " என்ற பெயரில் அழைக்கப்படும் குளமும் உள்ளது . இந்த இடத்தில் ஸ்ரீராமர் யாகம் செய்ததாகவும் , லக்ஷ்மணர் இங்கு நீராடியதாகவும் புராணங்கள் சொல்கின்றன. லக்ஷ்மன்காட் இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் தந்தி கிராமம் இடம் பெற்றுள்ளது . ஸ்ரீராமர் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தபோது சிறிய குடிசையில் தனியாக வாழ்ந்த பரதன் இந்த இடத்திலிருந்து அயோத்தியாவை ஆண்டு வந்தான் என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த இடம் "பரத குண்டம் " என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

பரத குண்டத்திற்கு அருகே சொர்க்கத் -துவாரம் என்ற குளம் ஒன்றை நாம் பார்க்கலாம் . இந்தக் குளம் "ஸ்ரீராமர் நீராடிய குளம் " என்ற சிறப்பை பெறுகிறது . இந்த இடத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் "தசரத தீர்த்தம் " என்ற இடத்தையும் காணலாம். தசரதர் மரணமடைந்த பிறகு இந்த இடத்தில் ஸ்ரீ ராமர் கடைசிக் காரியங்கள் செய்ததாக வரலாறு சொல்கிறது .

பிரம்ம தேவனும் அயோத்தியாவில் காட்சி கொடுத்ததால் அதற்கு அடையாளச் சின்னமாக "பிரம்ம குண்டம் " என்ற குளம் ஒன்று உள்ளது . இதற்கு அடுத்தாற்போல "சீதா குண்டம் " என்ற பெயரில் குளம் ஒன்று அமைந்துள்ளது . இந்தக் குண்டத்தில் நீராடினால் சகல பாவங்களும் கரைந்துவிடும் என்ற நம்பிக்கையோடு மக்கள் நீராடிச் செல்கிறார்கள் .

ஒரு சமயத்தில் ஸ்ரீ ராமரின் மூத்த புதல்வன் "குஷ் " சரயு நதியில் நீராடிக் கொண்டிருந்த பொழுதில் அவருடைய கங்கணம் தொலைந்துவிட்டது. அவருடைய கங்கணத்தை கைப்பற்றிய நாக கன்னிகை குஷ்விடம் அதைத் திருப்பிக் கொடுக்கும்போது அவர் மீது காதல் கொண்டால் . நாக கன்னிகை சிவ பக்தியுடையவள். அவள் காட்டிய அன்பிற்கு மரியாதை கொடுக்கும் பொருட்டு குஷ் "நாகேஷ்வரனாத் கோயில் " கட்டினார். விக்கிரமாதித்யன் ஆண்ட காலத்தில் இந்தக் கோயிலில் சிவராத்திரி பூஜைகள் கோலாகலமாக நடைபெற்றது என்று வரலாறு குறிக்கிறது. அவ்வளவு பழமை பெற்ற இந்தக் கோயில் இன்னும் பொலிவோடு சிறப்பாக காட்சி தருகிறது.

துளசிதாசர் என்ற மகாகவி பழம் பெரும் ராமாயணக் காவியத்தை ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்தார். அவர் வாழ்ந்த இடம் "துளசி செளரா" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. துளசி தாசர் ஸ்ரீ ராமர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். அவருடைய நாமங்களை பாடிக்கொண்டிருந்த துளசி தாசர் தீடிரென்று சமாதி அடைந்தார். துளசி தாசரின் நினைவாக அந்த இடத்தில் "துளசி ச்மாரக் பவன் " என்ற பெயரில் சிறிய கோவிலொன்று கட்டப்பட்டது .

அயோத்தியா மாநகரில் இடம் பெற்றுள்ள அனைத்து கோயில்களும் நம்மை வியக்க வைக்கின்றன . ஸ்ரீ ராமர் பிறந்த பூமி என்று அழைக்கப்படும் இந்த அழகிய அயோத்தியா மாநகரத்தை அனைவரும் சென்று பார்க்க வேண்டும்.

Tuesday, June 23, 2009

இந்தியர்கள் கொண்டாடும் முத்துமாரியம்மன் கோவில் - லண்டன்

101 பவுண்ட் நிதியோடு தொடங்கப்பட்ட சிவயோகம் அறக்கட்டளை சார்பாக லண்டன் மாநகரில் முத்துமாரி அம்மன் ஆலயம் எழுப்பப்பட்டது . முத்துமாரி கடல் தாண்டிக் காக்க வந்த கதை தெரியுமா ?

இந்தக் கோவிலை அமைப்பதற்கு முக்கிய காரியகர்த்தா நாகேந்திர சீவரத்தினம் என்பவர் ஆவார் . 1977 ஆம் ஆண்டில் இலங்கை , யாழ்ப்பாணத்திலுள்ள குளப்பிட்டியார் பொன்னுதுரை என்ற பெரியவர் சீவரத்தினத்திடம் , 'குல தெய்வத்திற்காக கர்ப்ப கிரகம் அமைக்கும் பொறுப்பு உனக்கு இருக்கிறது' என்று சொன்னார் . அந்தப் பெரியவருடைய வாக்கு பலித்தது . 1987 ஆம் ஆண்டில் நாகேந்திர சீவரத்தினம் லண்டன் வந்தபோது அங்கு எந்தவித திருக்கோவிலும் இல்லாததைக் கண்டார் . அங்குள்ள தமிழர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு திருக்கோவில் அமைக்க வேண்டுமென்று எண்ணினார் . ஆலயம் அமைத்து அதனை நிர்வகிக்க இங்கிலாந்து நாட்டின் சட்ட அமைப்பின் படி ஒரு அறக்கட்டளையை உருவாக்கினார் . அந்த அறக்கட்டளைக்கு 'சிவயோகம்' என்ற பெயரைச் சூட்டினார் . இந்த அறக்கட்டளைக்கு மூன்று அறங்காவலர்களையும் நியமித்தார் .

கோவிலுக்கு விக்ரகங்கள் செய்யும் பணியை ச்தபதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது . முதலில் பிரதான மூர்த்தியான முத்துமாரியம்மன் மூர்த்தியை வடித்து சீவரத்தினத்திடம் கொடுத்தார் . அதைக் கண்டு பேரானந்தம் அடைந்தார் . அவருக்கு 'அப்போது அம்பாள் வந்து சேர்ந்தால் , இனி எல்லாம் நல்லபடியாக அமையும் ' என்று இச்சினி சொல்வது போல ஒரு குரல் ஒலித்ததாம் .

05.04.1996-இல் சிவயோக அறக்கட்டளையின் மேற்பார்வையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து , அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் லண்டன் மாநகரிலே திறக்கப்பட்டது . சக்தி விநாயகர், சுப்ரமண்யர் , சீதை -லக்ஷமணன் -அனுமன் சகித ஸ்ரீராமர் , குருவாயூரப்பன் , லக்ஷ்மி , சரஸ்வதி , விஜயதுர்கை ஆகியோரின் சந்நிதிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டன . இவ்வாலயத்திற்கு அரசுப் பிரமாணமும் கிடைத்து , இன்றுவரை கோவிலை சிறப்பாக நடத்தி வருகிறார்கள் . ஆரம்பகாலத்தில் கோவிலுக்கு நிதி உதவியும் சரீர உதவியும் செய்ய முன்வந்தவர்கள் ஒருசிலரே . நாளடைவில் கோவில் வளர்ந்து வருடத்திற்கு இரண்டரை லட்சம் பவுண்டுகள் வருமானத்தை பெறுகிறது .

05-04-1996- இல் கும்பாபிஷேகம் நடைபெற்ற இவ்வாலயம் 2001-ஆம் ஆண்டில் ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து மகோத்சவ பெருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது . ஆண்டு முழுவதும் இந்த முத்து மாரியம்மன் கோவில் விழாக்கோலம் பூண்டிருக்கும் .

பிரதான மூர்த்தியாக அருள் தரும் அன்னை முத்துமாரியாம்ம்னக்கு சித்ரா பௌர்ணமியில் கொடியேற்றப்பட்டு 21 நாட்கள் மகோத்சவ பெருவிழா நடத்தப்படுகின்றது . இந்த மகோத்சவ பெருவிழாவில் தேர்த் திருவிழா , கரகத் திருவிழா , வேட்டைத் திருவிழா , சப்பரத் திருவிழா , ஊஞ்சல் திருவிழா, பூபல்லக் திருவிழா என்று பல திருவிழாக்கள் பக்தர்களால் நடத்தப்படுகிறது . வைகாசி விசாகத்தன்று 1008 சங்கு அபிஷேகம் நடைபெறுகிறது . ஆடிப்பூரத்தன்று 108 வலம்புரிச் சங்கு அபிஷேகத்தோடு லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது . நவராத்திரியில் அம்மன் கொலு மண்டப்பத்தில் காட்சி தருகிறாள் . பொங்கலன்று மிகச் சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது . இப்படி ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழாக் கோலம்தான் .

சக்தி விநாயகர் பெருமானுக்கு ஒவ்வொரு மாதத்திலும் வருகிற வளர்பிறை சதுர்த்தியில் சிறப்பு அபிஷேகமும் , ஆவணி சதுர்த்தியில் பத்து நாட்கள் அலங்காரத் திருவிழா நடைபெற்று வருகிறது . முருகப்பெருமானுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பத்து நாட்கள் அலங்காரத் திருவிழாவும் , கந்த்சஷ்டியின்போது ஆறு நாட்கள் திருவிழாவும் கோலாகலமாக நடைபெறும் .

சீதை , லக்ஷ்மணர், அனுமன் சகிதமாக வீற்றிருக்கும் ராமபிரானுக்கு ஏகாதசி மற்றும் ராம நவமியை அங்குள்ள தமிழர்கள் கோவிலில் ஒன்றுகூடி கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் . குருவாயூரப்பனுக்கு தேய்பிறை ஏகாதசியில் அபிஷேகமும் , கிருஷ்ணஜெயந்தியன்று உரியடியும் சிறப்பாக நடைபெறுகிறது .

ஆடி மாதத்தில் வரலக்ஷ்மி பூஜை , சுமங்கலிப் பூஜை , தை மாதம் கடைசி வெள்ளிகிழமையில் திருவிளக்கு பூஜையும் பிரமாதமாக நடைபெறுகிறது . இப்படி ஆண்டு முழுவதும் திருவிழாக் கோலத்தோடு அனைவருக்கும் அருள் புரிந்து கொண்டிருக்கும் முத்துமாரி அம்மனின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது . தங்கள் துன்பங்கள் நீங்க நாடிவரும் பக்தர்களுக்கு முத்துமாரி அம்மன் அருள் பொழிகிறாள் . குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதியர்கள் அம்பாள் சந்நிதியில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்கின்றனர் . அவர்களின் வேண்டுதல் பலித்து குழந்தை பாக்கியம் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வதைக் கண்கூடாகக் காணலாம் . லண்டன் மாநகரிலே வீற்றிருக்கும் அருள்மிகு முத்துமாரி அம்மன் அனைவரையும் காப்பாற்றுகிறாள் .

Saturday, June 20, 2009

நல்நம்பிக்கை வளர்க்கும் சுவாமி நாராயணர் அக்க்ஷர்தாம் கோயில் புதுடில்லி

புதுடில்லியில் யமுனை நதிக்கரையோரத்தில் நூறு ஏக்கர் பரப்பளவில் சுவாமி நாராயணன் அக்க்ஷர்தாம் ஆலயம் உருவாக்கப் பட்டுள்ளது . பிரமுக் சுவாமி மகாராஜ் என்பவர் (சுவாமி ரிஷி என்றும் அழைக்கப்படுகிறார் ) தனது குருவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்த ஆலயத்தை வடிவமைத்தார். இந்தக் கோவிலை கட்டி முடிப்பதற்கு ஐந்து ஆண்டுகள் ஆகின . 8.11.2000 ஆம் ஆண்டில் இந்தக் கோவிலுக்கு யோகிஜி மகாராஜ் அவர்கள் அடிக்கல் நாட்டினார். 6.11.2005 ஆம் ஆண்டில் சுவாமி ரிஷி தலைமையில் இந்தக் கோவில் திறப்பு விழா கண்டது.
மூன்று லட்சம் கற்களில் சிற்பங்களை வடிவமைத்து மிகவும் பிரம்மாண்டமாக இந்தக் கோவிலை உருவாக்கியுள்ளனர். ஆலயத்தின் வெளிப்புறத்தில் கண்ணை கவரும் வண்ணம் ரோஜா நிறம் கொண்ட மணல் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் வெள்ளைப் பளிங்குக் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. இவ்வாலயம் 141 அடி உயரமும், 356 அடி அகலமும், 313 அடி நீளமும் அமைத்துள்ளது . பல வகையான சிற்பங்கள் செதுக்கப்பட்ட 234 தூண்களைக் கொண்ட இந்த ஆலயத்தில் ஒன்பது பிரம்மாண்டமான கலையம்சம் நிறைந்த கோபுரங்களும் இடம் பெற்றுள்ளன . இந்தக் கோவிலில் பத்து நுழைவாயில்கள் உள்ளன . இந்தப் பத்து வாயில்களும் பத்து வகையான எண்ணங்களை பிரதிபலிக்கின்றன.

அதைக் கடந்து சென்றால் "மயூர் துவாரம்" என்னும் மயில் வாயில் உள்ளது . இங்கு கற்களால் செதுக்கப்பட்ட 869 மயில்கள் வெவ்வேறு அளவிலும் வடிவத்திலும் தொகையை விரித்து நர்த்தனம் செய்யும் காட்சி பிரமிக்கத்தக்கது . ஆலயத்தின் நடுப்பகுதியில் தங்கத் தகடுகளால் இழைக்கப்பட்ட 11 அடி உயரம் கொண்ட பகவான் சுவாமி நாராயண மூர்த்தி ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது . அவருடைய குரு பரம்பரையான அக்க்ஷர்பிரம்மா குணாதி நந்த சுவாமிஜி , பக்ஷிஜி மகாராஜ் , சாந்திரிஜி மகாராஜ் , யோகிஜி மகாராஜ் , பிரமுக் சுவாமி மகாராஜ் ஆகியோரும் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளனர் .

பகவான் சுவாமி நாராயணன் 02.04.1781 ஆம் ஆண்டில் அயோத்யா மாநகரிலுள்ள சப்பைய்யா என்ற கிராமத்தில் பிறந்தார் . பாலபருவத்தில் இவர் கன்ஷ்யாம் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் . எட்டு வயதிலே கன்ஷ்யாமிற்கு உபநயனம் செய்வித்து வேத்சாலைக்கு அனுப்பப்பட்டார் . அங்கு சாஸ்திரங்கள் , புராணங்கள் , வேதங்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டார் . அவருடைய பத்தாவது வயதிலே சாஸ்திரங்களைப் பற்றி ஆன்மீகச் சிந்தனையோடு மக்களுடன் உரையாடினார் . பதினொன்றாவது வயதில் 1200 கிலோமீட்டர்களை கடந்து இமய மலையிலுள்ள மானசரோவர் வந்து சேர்ந்தார் . அங்கு கடும் தவம் புரிந்தார். அங்கிருந்து பல இடங்களுக்குப் பயணத்தை தொடங்கினார் . கடைசியில் குஜராத் மாநிலத்தில் லொஜ் என்ற இடத்தில் உள்ள ராமானந்த் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார் . ராமானந்த் சுவாமி அவருக்கு தீக்ஷை கொடுத்து சஜானந்த் சுவாமி என்ற பெயரையும் சூட்டினார் . ராமானந்த் சுவாமி மறைந்த பிறகு சஜானந்த் சுவாமி 21 வயதிலே ஆஸ்ரமத்திற்கு தலைமை வகித்தார் . அவர் சுவாமி நாராயணன் மகா மந்திரத்தை போதித்தார் . அதிலிருந்து அவர் பகவான் சுவாமி நாராயணன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் . தீண்டாமை , ஜாதிபிரச்ச்சனை , பெண் சிசுவதம் , உடன்கட்டை ஏறுதல் போன்ற தீய பழக்கங்களை எதிர்த்தார் . பகவான் சுவாமி நாராயணன் 49 ஆவது வயதில் இறைவனுடன் கலந்தார்.

சுவாமி நாராயணன் சந்நிதியில் கண்களை மூடிக்கொண்டு சற்று நேரம் தியானம் செய்தால் நம்மிடமிருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கின்றன. தூய்மையும் அமைதியும் நிலவும் இந்த சந்நிதியை சுற்றி ஆங்காங்கே சுவாமி நாராயணின் பருவ காலத்தை கட்டும் வகையில் பெரிய அளவில் புகைப்படங்கள் மாட்டப்பட்டு , அதனருகே அவரைப் பற்றிய விவரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன .

மேலும் இவ்வாலயத்தில் சீதாதேவி , லக்ஷ்மணர் , அனுமார் சமேதராக ஸ்ரீராமர் , ராதாகிருஷ்ணன் , சிவன்-பார்வதி , ஸ்ரீலக்ஷ்மி நாராயணர் ஆகிய மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர் . இந்த சந்நிதியில் பிரமாண்டமான கலையம்சம் மிக்க மேற்கூரைகள் பிரமிக்க வைக்கின்றன .இந்தக் கோவிலை தாங்கிக் கொண்டிருக்கும் 234 தூண்களிலும் விதவிதமான நர்த்தனம் செய்யும் சிற்பங்களைப் பார்க்கலாம் .

கற்களால் செதுக்கப்பட்ட 1070 யானை வடிவங்களை கொண்ட கஜேந்திர பீடமும் இந்தக் கோவிலில் இடம் பெற்றுள்ளது . 151 நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரால் நிரப்பப்பட்ட நாராயண் சரோவர் என்னும் நீர்நிலை கோவிலை சுற்றி இடம் பெற்றுள்ளது . இதில் குளிப்பவர்கள் சகல வியாதிகளும் குழப்பங்களும் நீங்கி , முகத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் பெற்றுச் செல்கிறார்கள் .

இதைத் தவிர, கோவிலுக்குள் சுரங்கப் பாதை அமைத்து கண்காட்சி சாலையும் அமைக்கப்பட்டுள்ளது . மேலும் சங்கீதத்தோடு இயங்கும் செயற்கை நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது . இரவு வேளையில் வண்ண மின் விளக்குகளின் ஜொலிப்பில் சங்கீதத்தோடு இயங்கும் செயற்கை நீரூற்றை பார்த்து ரசிக்கலாம் . மின் விளக்குகளின் பிரகாசத்தில் ஜொலிக்கும் இவ்வாலயத்தை இரவு நேரத்தில் பார்க்கும்போது தெய்வ லோகத்தில் இருப்பது போன்ற உணர்வை அனுபவிக்கலாம் .

புதுடில்லி செல்பவர்கள் சுவாமி நாராயணன் அக்க்ஷர்தாம் ஆலயத்தை அவசியம் தரிசியுங்கள் .