Thursday, June 25, 2009

அயோத்தியில் அழகிய கோயில்கள்


உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள சரயு நதிக் கரையோரத்தில் அயோத்தியா மாநகரம் அமைந்துள்ளது. உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அயோத்தியா மாநகரம் அமைந்துள்ளது . அயோத்தியா " ஸ்ரீராமர் பிறந்த பூமி " என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது . அயோத்தியாவில் இடம் பெற்றுள்ள ஸ்ரீ ராமர் கோயிலருகே மசூதி ஒன்றும் இருந்தது . 15 -ஆவது நூற்றாண்டில் முகலாயர்கள் ஆண்ட காலத்தில் இந்தப் பாப்ரி மசூதி கட்டப்பட்டது என்பது வரலாறு. பெரும் சர்ச்சைக்கு பிறகு 1992 -ஆம் ஆண்டில் இந்த மசூதி இடிக்கப்பட்டது.

அயோத்தியா நுழைந்தவுடன் " குப்தர் காட்" என்ற இடம் உள்ளது . சக்ர ஹர்ஜீ விஷ்ணு எனும் புகழ்பெற்ற கோயில் இந்த இடத்தில் உள்ளது. இந்தக் கோயிலில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களை வர்ணிக்கும் வகையில் சிற்பங்களும், மூர்த்திகளும் அழகாக காட்சி தருகின்றன. இவற்றுள் ஸ்ரீராமமூர்த்தி மிகவும் விஷேசமாக மக்களால் துதிக்கப்படுகிறார். மேலும் ஸ்ரீராமர் பாதங்கள் தொட்ட மண் என்ற சிறப்பால் அவருடைய பாதங்கள் கொண்ட சின்ன சந்நிதியும் இடம் பெற்றுள்ளது .

அடுத்து " ஸ்ரீராமர் ஜென்மஸ்தானம் " என்ற இடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த இடம் ஸ்ரீராமனின் வாழ்க்கை வரலாற்றை வர்ணிக்கும் வகையில் நூறு மூர்த்திகள் கொண்ட சின்ன சின்ன நூறு சந்நிதிகள் கொண்டுள்ளன. இந்த இடத்தை ஒட்டினாற்போல " கனகபவன் " என்ற கோயிலும் இடம்பெற்றுள்ளது . அந்தக் காலத்தில் ஆண்ட அர்ச்சா என்ற அரசனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் "சீதாமஹால் " என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் ஸ்ரீ ராமர் சீதாதேவியின் மூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன.

கனகபவன் கோயிலைத் தாண்டி அறுபது படிக்கட்டுகள் கொண்ட சிறிய குன்றின் மேல் அனுமார் கோயில் ஒன்றுள்ளது. ஆறு அடி நீளத்தில் அமர்ந்த வண்ணம் அனுமார் சிலை வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் காட்சி தருகிறது.

இதனை அடுத்து " லக்ஷ்மன் காட் " என்ற பெயரில் அழைக்கப்படும் குளமும் உள்ளது . இந்த இடத்தில் ஸ்ரீராமர் யாகம் செய்ததாகவும் , லக்ஷ்மணர் இங்கு நீராடியதாகவும் புராணங்கள் சொல்கின்றன. லக்ஷ்மன்காட் இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் தந்தி கிராமம் இடம் பெற்றுள்ளது . ஸ்ரீராமர் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தபோது சிறிய குடிசையில் தனியாக வாழ்ந்த பரதன் இந்த இடத்திலிருந்து அயோத்தியாவை ஆண்டு வந்தான் என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த இடம் "பரத குண்டம் " என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

பரத குண்டத்திற்கு அருகே சொர்க்கத் -துவாரம் என்ற குளம் ஒன்றை நாம் பார்க்கலாம் . இந்தக் குளம் "ஸ்ரீராமர் நீராடிய குளம் " என்ற சிறப்பை பெறுகிறது . இந்த இடத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் "தசரத தீர்த்தம் " என்ற இடத்தையும் காணலாம். தசரதர் மரணமடைந்த பிறகு இந்த இடத்தில் ஸ்ரீ ராமர் கடைசிக் காரியங்கள் செய்ததாக வரலாறு சொல்கிறது .

பிரம்ம தேவனும் அயோத்தியாவில் காட்சி கொடுத்ததால் அதற்கு அடையாளச் சின்னமாக "பிரம்ம குண்டம் " என்ற குளம் ஒன்று உள்ளது . இதற்கு அடுத்தாற்போல "சீதா குண்டம் " என்ற பெயரில் குளம் ஒன்று அமைந்துள்ளது . இந்தக் குண்டத்தில் நீராடினால் சகல பாவங்களும் கரைந்துவிடும் என்ற நம்பிக்கையோடு மக்கள் நீராடிச் செல்கிறார்கள் .

ஒரு சமயத்தில் ஸ்ரீ ராமரின் மூத்த புதல்வன் "குஷ் " சரயு நதியில் நீராடிக் கொண்டிருந்த பொழுதில் அவருடைய கங்கணம் தொலைந்துவிட்டது. அவருடைய கங்கணத்தை கைப்பற்றிய நாக கன்னிகை குஷ்விடம் அதைத் திருப்பிக் கொடுக்கும்போது அவர் மீது காதல் கொண்டால் . நாக கன்னிகை சிவ பக்தியுடையவள். அவள் காட்டிய அன்பிற்கு மரியாதை கொடுக்கும் பொருட்டு குஷ் "நாகேஷ்வரனாத் கோயில் " கட்டினார். விக்கிரமாதித்யன் ஆண்ட காலத்தில் இந்தக் கோயிலில் சிவராத்திரி பூஜைகள் கோலாகலமாக நடைபெற்றது என்று வரலாறு குறிக்கிறது. அவ்வளவு பழமை பெற்ற இந்தக் கோயில் இன்னும் பொலிவோடு சிறப்பாக காட்சி தருகிறது.

துளசிதாசர் என்ற மகாகவி பழம் பெரும் ராமாயணக் காவியத்தை ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்தார். அவர் வாழ்ந்த இடம் "துளசி செளரா" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. துளசி தாசர் ஸ்ரீ ராமர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். அவருடைய நாமங்களை பாடிக்கொண்டிருந்த துளசி தாசர் தீடிரென்று சமாதி அடைந்தார். துளசி தாசரின் நினைவாக அந்த இடத்தில் "துளசி ச்மாரக் பவன் " என்ற பெயரில் சிறிய கோவிலொன்று கட்டப்பட்டது .

அயோத்தியா மாநகரில் இடம் பெற்றுள்ள அனைத்து கோயில்களும் நம்மை வியக்க வைக்கின்றன . ஸ்ரீ ராமர் பிறந்த பூமி என்று அழைக்கப்படும் இந்த அழகிய அயோத்தியா மாநகரத்தை அனைவரும் சென்று பார்க்க வேண்டும்.

1 comment:

  1. மிக மிக அருமை . நன்றாக உள்ளது

    ReplyDelete