Monday, December 21, 2009

ஹரியோடு இணைய வைக்கும் ஹரித்துவார்


கங்கையின் மேற்குத் திசைக் கரையோரத்தில் இடம் பெற்றுள்ள ஹரித்துவார் தெய்வீக பூமிகளுள் ஒன்று என்று சொல்லலாம் . இமையத்திலிருந்து உருவாகிய கங்கை முதன் முதலில் ஹரித்துவாருக்குள் நுழைகிறாள் . அதனால் ஹரித்துவார் கங்காத்துவார் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அலகாபாத், நாசிக், உஜ்ஜைனி, ஹரித்துவார் ஆகிய நான்கு இடங்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்ப மேலா நடைபெறுகிறது. ஹரித்துவாரில் உள்ள கங்கையில் வைகாசி முதல் தினத்தன்று நீராடுவது மிகவும் விசேஷமாகும். ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் அன்றைய தினத்தன்று கங்கையில் நீராடிச் செல்லுகிறார்கள்.

மகாவிஷ்ணுவின் சரணங்கள் பட்ட இடமான ஹர் -கி -புரி என்ற இடமும் ஹரித்துவாரில் அமைந்துள்ளது . ஹர் -கி -புரியில் கங்கையைப் போற்றும் வகையில் கோயில் ஒன்றும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது . ஒவ்வொரு நாளும் இந்தக் கோயிலில் கங்கா தேவிக்கு சிறப்பான பூஜை நடைபெற்று வருகிறது. இரவு வேளையில் கங்கையில் பல அகல் விளக்குகள் மிதக்கும் அழகிய காட்சி நம்மைப் பிரமிக்க வைக்கிறது. மக்கள் கங்கையில் நீராடுவதற்கு ஹர் -கி -புரி குளம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

ஹர் -கி -புரியிலிருந்து அரைக் கிலோமீட்டர் தொலைவில் சப்தரிஷி ஆஷ்ரமம் ஒன்றைப் பார்க்கலாம். இந்த ஆஸ்ரமம், பஞ்சபாண்டவர்கள் தஞ்சம் அடைந்த காலகட்டத்தில் பாண்டர்வர்களுள் பீமனின் கால்முட்டி பூமியை தொட்டு பீமா குண்டம் என்ற குளத்தை உருவாகிய சிறப்பு வரலாற்றைப் பெற்றது. ஹர் -கி -புரியின் தெற்கு திசையிலிருந்து அரைக் கிலோ மீட்டர் தொலைவில் குஷ்வர்தா குளமொன்றும் உள்ளது . இந்தக் குளத்தின் அருகே தத்ரேயா முனிவர் ஆயிரம் வருடங்களாக ஒற்றைக் காலில் நின்று கடுந்தவம் புரிந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

ஹரித்துவாரின் கிழக்குத் திசையிலுள்ள சிவாலிக் மலை தொடர்களில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் சண்டிதேவி, அஞ்சனா தேவி, கௌரிசங்கர், நீலேஷ்வர் ஆகிய நான்கு கோயில்களைக் காணலாம் . அவற்றையொட்டி புராதனக் கோயில்களான நாராயணசீலா, மாயாதேவி, கோயில்களும் இடம் பெற்று இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஹரித்துவாரின் தெற்குத் திசையிலிருந்து நான்கு கிலோ மீட்டர் கடந்து கங்ககல் என்ற இடத்தைக் காணலாம். இந்த இடத்தில் தகஷ் மகாராஜா மாபெரும் யாகத்தைத் தொடங்கினார். அந்த யாகத்திற்கு மகள் சதியையும், மருமகன் சிவபெருமானையும் மகாராஜா அழைக்கவில்லை. இருந்தாலும் சதி தந்தையின் யாகத்தில் கலந்துகொந்தாள். அதற்கு மகாராஜா சிவபெருமானைப் பற்றி இழிவாக பேசுவதைக் கேட்ட சதி, யாக குண்டத் தீயில் விழுந்து உயிர் நீத்தாள். இந்தச் செய்தியைக் கேட்ட
சிவபெருமான் மகாராஜாவின் தலையைச்சீவி யாககுண்டத் தீயில் தூக்கி எரிய வீரபத்ரனை உருவாக்கினார். வீரபத்ரனும் சிவபெருமானின் கட்டளையை நிறைவேற்றினான். அதற்கு பிறகு பிரம்மதேவனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சிவபெருமான், மகாராஜாவிற்கு மீண்டும் உயிர் கொடுத்தார். யாககுண்டத்தில் தலை முழுமையாக எரிந்துவிட்டதால், சிவபெருமான் ஆட்டுத் தலையைக் கொடுத்தார் என்ற வரலாற்றுப் பெருமையை இந்த இடத்தோடு இணைத்துப் பேசப்படுகிறது.

ஹரித்துவாரிலுள்ள பிர்வபர்வதத்தில் மானசாதேவி கோயிலைக் காணலாம். மனதில் நினைத்ததை நடத்தித் தருபவள் மானசாதேவி என்ற நம்பிக்கையோடு மக்கள் இந்த சக்திதேவியை வணங்குகிறார்கள். பிர்வபர்வதத்தின் உச்சியிலிருந்து ஹரித்துவாரின் அழகைப் பார்த்து ரசிக்கலாம். ஹரித்துவாரிளிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் ரிஷிகேஷ் என்ற இடத்தையும் பார்க்கலாம். அமைதிப் பூங்காவான இந்த இடத்தில் அதிக அளவில் ஆஸ்ரமம் நிறைந்திருப்பதைக் காணலாம். ஆதி சங்கரரால் கட்டப்பட்ட பரத கோயில் ஒன்றும் ரிஷிகேஷத்தில் இடம்பெற்று உள்ளது. இந்த இடத்தில் புகழ்பெற்ற லக்ஷ்மண ஜூலா என்ற இடத்தையும் பார்க்கலாம். ஹரியோடு இணைவதற்கு முதல் நுழைவாயில் என்ற சிறப்பை பெற்ற ஹரித்துவாரைப் பார்க்கச் செல்வது மிகவும் அவசியமானது.


1 comment:

  1. நேத்து தான் இங்கெல்லாம் போய்விட்டு வந்தோமாக்கும் நாங்க ;) நல்லா விவரங்கள் எழுதி இருக்கீங்க.. நன்றி. ( please remove word verification )

    ReplyDelete