Sunday, December 20, 2009

மனதுக்கினிய மதுரா மாநகர்


கிருஷ்ண பரமாத்மா பிறந்த இடமான மதுரா மாநகரத்தை மக்கள் தெய்வீக பூமியாக கொண்டாடுகிறார்கள் . அங்கு கிருஷ்ணர் வளர்ந்த இடமான பிருந்தாவன் விசேஷமாக குறிப்பிடத்தக்கது . 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகிருஷ்ணரின் பேரன் வஜ்ரநாபன் மதுரா மாநகரத்தில் கேசவா கோயிலைக் கட்டினார். அந்தக் கோயிலின் அருகே சந்திரகுப்த விக்கிரமாதித்ய அரசன் இன்னொரு கிருஷ்ணர் கோயிலைக் கட்டினார். நாளடைவில் வஜ்ர நாபன் கட்டிய கேசவா கோயில் சேதமடைந்தது . விக்கிரமாதித்யன் கட்டிய கோயிலில் இடம் பெற்றுள்ள சிற்பங்களும், ஓவியங்களும் அந்தக்காலத்து மக்களின் மனதைக் கவர்ந்தன. தீடிரென்று முகலாயர்கள் மதுரா மாநகரத்தின் மீது படை எடுத்தார்கள் . அவர்கள் விக்கிரமாதித்யன் கட்டிய கிருஷ்ணர் கோயிலை இடித்து நொறுக்கினார்கள் . மேலும் கோயிலில் இடம் பெற்றிருந்த சிறந்த விலை மதிப்பு மிக்க ஓவியங்களைக் பறித்துச் சென்றார்கள் .
பல ஆண்டுகளுக்கு முன்பு வஜ்ர நாபனால் கட்டப்பட்ட கேசவா கோயில் மீண்டும் புதுபிக்கப்பட்டது. வஜ்ர நாபனால் உருவாக்கப்பட்ட ராதாகிருஷ்ணர் மூர்த்திகளும் புதுப்பிக்கப்பட்டன. கோயிலின் நடுவில் ராதாகிருஷ்ணர் மூர்த்தியும், இடது புறத்தில் சுபத்ரா, ஜகன்னாதர், பலராமர் மூர்த்திகளும், வலது புறத்தில் பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீராமர், லக்ஷமணர் , சீதா, அனுமார் மூர்த்திகளும் வைக்கப்பட்டுள்ளன. கோயிலின் உள்ளே சற்று தள்ளி சிவலிங்கமும், துர்கா தேவியும் காட்சி தருகிறார்கள் . இந்தக் கோயிலின் அருகில் சின்ன சிறை போலக் காட்சி தரும் சன்னதியும் இடம்பெற்றுள்ளது . இந்தச் சிறைச் சன்னதியில் வசுதேவர் தேவகி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கேசவா கோயில் யமுனை நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ளது . கம்சனைக் கொன்ற ஸ்ரீகிருஷ்ணர் இந்த நதியில் நீராடி சற்று இளைப்பாறினார் என்று புராணங்கள் சொல்கின்றன . அதனால் இந்த இடம் விஸ்ராம் காத் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மதுரா மாநகரத்தில் இடம் பெற்றுள்ள சிறிய குன்றில் கிருஷ்ணர் கம்சனைக் கொன்று வென்றார் . அதனால் அந்த இடத்தை மக்கள்' ரங்கபூமி' என்று அழைக்கிறார்கள். அந்தக் குன்றின் உச்சியை 'கம்சதீலா என்ற பெயரால் அழைக்கிறார்கள். குன்றின் பின்புறத்தில் கிருஷ்ணர் உக்கிரசேனனுக்கு மகுடம் சூட்டி மதுரா மாநகரத்தின் அரசனாக்கினார் .

மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி உக்கிரசேனன் சக்தி வாய்ந்த சிவலிங்கம் உள்ள ரங்கம் ஈஸ்வர மகாதேவா கோயிலைக் கட்டினார் . பயில்வான்கள் குத்துச் சண்டையில் வெற்றி பெறுவதற்கு இந்தக் கோயிலுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள் . மதுரா 1814 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பிரசித்திப் பெற்ற துவாரகாதீஷ்வர் கோயிலும் அமைந்துள்ளது.

மதுரா மாநகரத்திலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் பிருந்தாவன் அமைந்துள்ளது . யசோதா கிருஷ்ணரை வளர்த்த இடம் என்ற பெருமையைப் பெற்றது இந்த பிருந்தாவன் . குறிகிய வீதிகளுடைய அழகிய மாநகரமாக காட்சி தருகிறது. இந்த பிருந்தாவனத்தில் சுமார் 5 ஆயிரம் கோயில்கள் இடம் பெற்றுள்ளன . அவற்றுள் சில முக்கியமான கோயில்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம் . கிருஷ்ணர் , பலராமர், ராதா மூர்த்திகலைக் கொண்ட கிருஷ்ண- பலராமர் கோயில் பிருந்தாவனத்தில் குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமிகள் சமாதி பெற்றார் என்பது விசேஷமானது . இந்தக் கோயிலில் அவர் சமாதி பெற்ற சன்னதியும் இடம் பெற்றுள்ளது . 1590 ஆம் ஆண்டில் ஜெய்ப்பூரை ஆண்ட ராஜா மான்சிங்க் என்பவர் மதுரா மாநகரத்தில் கோவிந்த்ஜி கோயிலைக் கட்டினார் . இந்தக் கோயில் பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. கோயில் கதவுகள் வெள்ளித் தகடுகளால் செய்யப்பட்டது. கிருஷ்ணர்ராதா வடிவத்தில் தங்க விக்கிரங்களும் ராஜா மான்சிங்கினால் இந்தக் கோயில் ஸ்தாபனம் செய்யப்பட்டது. அப்போது முகலாயர்கள் படை எடுத்துள்ளதாக செய்தி அறிந்த ராஜா மான்சிங்க் தங்க விக்கிரங்களை தனது மாளிகையில் பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தார் என்றி வரலாறு சொல்கின்றது . 1951 ஆம் ஆண்டில் மறுபடியும் இந்த கோவிந்த்ஜி கோயில் புதுப் பிக்கப்பட்டது . 1590 ஆம் ஆண்டில் ராஜா மான்சிங்கினால் உருவாகப்பட்ட தங்க விக்கிரங்கள் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோயிலில் மீண்டும் வைக்கப்பட்டன.
ஜீவகோஸ்வாமி என்பவர் கிருஷ்ணர் மீது அளவு கடந்த பாசத்தையும் அன்பையும் வைத்திருந்தார் . அவர் ராதா தாமோதர கோயிலைக் கட்டினார் . இந்தக் கோயிலில் கிருஷ்ணரின் சின்ன சின்ன பாதங்கள் பதிந்த திருப்பதைக் காணலாம் . கிருஷ்ணரின் பாதங்களைக் கொண்ட சன்னதியும் இந்தக் கோயிலில் இடம் பெற்றுள்ளது . கோபால்பட் கோஸ்வாமி என்பவர் ராதாரமணர் கோயிலை பிருந்தாவனத்தில் கட்டினார். கோபால்பட் வைத்திருந்த சாலிக் கிராமத்திலிருந்து உருவாகிய ராதாரமணர் மூர்த்திகள் இந்தக் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. வருடா வருடம் வைகாசி மாதத்தில் ராதாரமணர் மூர்த்திகளை 100 லிட்டர் பாலினால் நீராட்டி மக்கள் மாபெரும் விழாவாக கொண்டாடி வருகிறார்கள் . பிருந்தாவனத்தின் அருகே நிதிவன் என்ற இடத்திலிருந்து சுவாமி ஹரிதாஸ் பாகே பிஹாரி மூர்த்தியை கைப்பற்றினார். அவர் 1864 ஆம் ஆண்டில் பாகே பிஹாரி கோயிலைக் கட்டினார் . இந்தக் கோயிலின் பிரதான சன்னதியான பாகே பிஹாரி சன்னதி எப்போதும் திரைச் சீலையால் மூடப்பட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. பாகே பிஹாரியின் அழகை மக்கள் காண்பதற்கு ஒரு நொடியில் திரைசீலை திறந்து மூடப்படும். அக்ஷயதிதியன்று பாகே பிஹாரியின் கமலப் பாதங்கள் திரைச்சீலையின் அடியிலிருந்து மக்கள் கண்டு வணங்கிச் செல்கிறார்கள் .

பிருந்தாவன மாநகரத்தில் புகழ் பெற்ற சேவாகுஞ்ச என்ற இடம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் இரவு வேளையில் கிருஷ்ணரும், ராதையும் காட்சி தருவதாக மக்கள் நம்புகிறார்கள் . மண்ணில் புதைந்த கிருன்ஷ்னரின் புல்லாங்குழலினாள் உருவாகிய குளத்தில் இன்றும் ஸ்ரீகிருன்ஷ்னர் ராதையோடும் மற்ற கோபிகைகளுடனும் விளையாடி மகிழ்வதாக மக்கள் நம்புகிறார்கள் . பகல் வேளையில் குரங்குகள் நிரம்பிய இந்தக் குளத்தில் மக்கள் நீராடிச் செல்கிறார்கள். எவரையும் அந்திப் பொழுதில் இந்த இடத்திற்கு அனுமதிப்பதில்லை . பழமையான கோயில்களைக் கொண்ட மதுரா , பிருந்தாவன் மாநகரத்திற்கு மக்கள் ஒரு முறையாவது சென்று வரவேண்டும்.


1 comment:

  1. தீபாவளி தினத்தையொட்டி மதுரா பகுதிகளுக்குப் போவதாக ஒரு திட்டம்

    உங்களுடைய இந்தப் பதிவிலிருந்து பார்க்கவேண்டிய முக்கிய இடங்களைக் குறிச்சு வச்சுக்கிட்டேன்.

    நன்றி.

    ReplyDelete