Tuesday, December 22, 2009

வினை அகற்றும் புண்ணிய புஷ்கரம்


ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீர்த்தத் தலமான புஷ்கரத்தைச் சுற்றி 400 கோயில்கள் உள்ளன. ஒட்டகக் கண்காட்சிக்கும் பிரசத்திப் பெற்றது புஷ்கரம். தீர்த்தக் தலங்களில் புஷ்கரமும் ஒரு முக்கிய இடமாக கருதப்படுகிறது. கார்த்திகைப் பௌர்ணமி அன்று புஷ்கரத்தில் நீராடினால், பல்லாயிரம் யாகங்கள் செய்த பலன் கிட்டும் என நம்பப்படுகிறது.

மலைகளுக்கு நடுவில் இடம் பெற்றுள்ள புஷ்கரத்தில் 52 நீராடும் குண்டங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு குண்டத்தின் தண்ணீரும் ஒவ்வொரு சக்தியைக் கொண்டது. நாக குண்டத்தில் நீராடினால் குடும்பம் செழிக்கும் என்றும்,
ரூப்தீர்த் குண்டத்தில் நீராடினால் அழகின் மெருகு கூடுமென்றும் சொல்லுகிறார்கள் .

கபிலவியாப குண்டத்தில்நீராடினால்குஷ்டரோகம் குணமடையும் என்ற நம்பிக்கையோடு பேரு வியாதிக்காரர்கள் நீராடிச் செல்லுகிறார்கள். மிருகண்டுமுனி குண்டத்தில் நீராடினால் ஞானத்தைப் பெறலாம் என்று சொல்லுகிறார்கள். மேலும் இங்குள்ள தாமரைப் பொய்கையிலிருந்துதான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்லுகின்றன.

பேரண்டத்தைப் படைத்த பிரம்மதேவன் இந்த அழகிய புஷ்கரத்தைப் படைத்தார் என்று பத்மபுராணம் சொல்லுகின்றது. வஜ்ரநாபன் என்ற அரக்கனை தாமரை இதழ்களால் பிரம்மதேவன் வதம் செய்ய முயற்சித்த போது, அவருடைய கைகளில் இருந்து மூன்று தாமரை இதழ்கள் வெவ்வேறு இடங்களில் விழுந்தன . அவ்வாறு விழுந்த இடங்களில் ஆறு கிலோமீட்டர் சுற்றளவுக்கு சுவையான நீர் நிரம்பிய ஏரிகள் உருவாகின. அவ்வாறு தோன்றியவற்றில் ஒன்றுதான் இத்தலத்திலுள்ள ஏரி . தாமரை இதழ்களால் உருவாகிய ஏரிக்கு புஷ்கரம் என்று பிரம்மதேவன் பெயர் சூட்டினார் மறைந்த முன்னோர்களுக்கான ஈமக்கடன்களை இந்த புஷ்கரத்திலுள்ள கயாகுண்டம் என்ற இடத்தில் செய்கிறார்கள்.

இங்கே பிரம்மதேவனுக்கு தனிக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. சிவப்பு கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோவிலின் நுழைவாயிலில் பிரம்மதேவனின் வாகனமான அன்னங்களைக் காணலாம் . கோவிலின் பிரதான சந்நிதியில் காயத்ரியோடு நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவன் காட்சி தருகிறார். இந்தக் கோவிலில் இந்திரன், குபேரன் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன. இங்கே அமைந்துள்ள வராகர் கோவில் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான ஆலயமாகும். இரண்டு அடி உயரமுள்ள திருமேனியோடு வராகப் பெருமான் அருள்புரிகிறார். 1823 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ரகுநாதர் கோவிலையும் புஷ்கரத்தில் பார்க்கலாம் . இந்தக் கோவிலில் வேணுகோபாலன், நரசிம்ஹர் , லக்ஷ்மி ஆகியோர் அருள்புரிகின்றனர். இந்தக் கோவிலருகே வைகுண்டநாதர், லஷ்மி மூர்த்திகலை கொண்ட புதிய ரகுநாதர் கோவிலும் கட்டப்பட்டுள்ளது.

முற்காலத்தில் பிரம்மதேவன் இப்பகுதியில் மாபெரும் யாகத்தை நடத்தினாராம். தம்பதியர்களாக அமர்ந்து யாகத்தை நடத்த வேண்டுமென்பதால், பிரம்மதேவன் தன்னுடைய மனைவி சாவித்ரியை அழைத்திருந்தார். ஆனால் சாவித்திரி குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால், நல்ல நேரத்தை நழுவவிடாமல் இருக்க பிரம்மதேவன் காயத்ரியை மணந்து கொண்டார். தாமதமாக வந்த சாவித்திரி பிரம்மதேவனோடு அமர்ந்து காயத்ரி யாகம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து கோபம் கொண்டு , பூலோகத்தில் இந்த இடத்தைத் தவிர்த்து வேறு எந்த இடத்திலும் பிரம்மதேவனுக்கு கோவிலே இருக்காது என்று சாபம் இட்டுவிட்டு, புஷ்கரத்திலுள்ள ரத்னகிரி மலையின் உச்சியில் சென்று அமர்ந்து கொண்டால். அந்த மலையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சாவித்திரிக்கு ஒரு கோவிலும் கட்டப்பட்டது.

புகழ்பெற்ற நாகா குன்றும் புஷ்கரத்தில் இடம் பெற்றுள்ளது . இந்த நாகா குன்றில் பிரம்மதேவனின் விருப்பப்படி பிருகு முனிவர் யாகத்தை நடத்தினார் . இந்த யாகத்திற்கு பிரம்மதேவனின் பேரனான வது, நாகம் ஒன்றை அனுப்பி வைத்தான் . தன்னுடைய தந்தையின் பக்கத்தில் பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்து கோபம் கொண்ட ரிஷி சயாவன், வதுவைப் பாம்பாகப் பிறக்க வேண்டுமென்று சாபம் கொடுத்தார் . தன்னுடைய தவறை உணர்ந்த வது ரிஷியிடம் மன்னிப்பு கேட்கக் கொண்டான் . இந்தக் குன்றில் சின்ன ஏரியைப் படைத்த பிரம்மதேவன், வதுவை நாகா குன்றில் நிரந்தரமாக இருக்க வேண்டுமென்று அருள் கொடுத்து மறைந்தார் . இத்தகைய புராணச் சிறப்புகள் கொண்ட இயற்கை வளம் நிரம்பிய அழகிய புஷ்கத்தில் நீராட நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment