Saturday, June 20, 2009

நல்நம்பிக்கை வளர்க்கும் சுவாமி நாராயணர் அக்க்ஷர்தாம் கோயில் புதுடில்லி

புதுடில்லியில் யமுனை நதிக்கரையோரத்தில் நூறு ஏக்கர் பரப்பளவில் சுவாமி நாராயணன் அக்க்ஷர்தாம் ஆலயம் உருவாக்கப் பட்டுள்ளது . பிரமுக் சுவாமி மகாராஜ் என்பவர் (சுவாமி ரிஷி என்றும் அழைக்கப்படுகிறார் ) தனது குருவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்த ஆலயத்தை வடிவமைத்தார். இந்தக் கோவிலை கட்டி முடிப்பதற்கு ஐந்து ஆண்டுகள் ஆகின . 8.11.2000 ஆம் ஆண்டில் இந்தக் கோவிலுக்கு யோகிஜி மகாராஜ் அவர்கள் அடிக்கல் நாட்டினார். 6.11.2005 ஆம் ஆண்டில் சுவாமி ரிஷி தலைமையில் இந்தக் கோவில் திறப்பு விழா கண்டது.
மூன்று லட்சம் கற்களில் சிற்பங்களை வடிவமைத்து மிகவும் பிரம்மாண்டமாக இந்தக் கோவிலை உருவாக்கியுள்ளனர். ஆலயத்தின் வெளிப்புறத்தில் கண்ணை கவரும் வண்ணம் ரோஜா நிறம் கொண்ட மணல் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் வெள்ளைப் பளிங்குக் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. இவ்வாலயம் 141 அடி உயரமும், 356 அடி அகலமும், 313 அடி நீளமும் அமைத்துள்ளது . பல வகையான சிற்பங்கள் செதுக்கப்பட்ட 234 தூண்களைக் கொண்ட இந்த ஆலயத்தில் ஒன்பது பிரம்மாண்டமான கலையம்சம் நிறைந்த கோபுரங்களும் இடம் பெற்றுள்ளன . இந்தக் கோவிலில் பத்து நுழைவாயில்கள் உள்ளன . இந்தப் பத்து வாயில்களும் பத்து வகையான எண்ணங்களை பிரதிபலிக்கின்றன.

அதைக் கடந்து சென்றால் "மயூர் துவாரம்" என்னும் மயில் வாயில் உள்ளது . இங்கு கற்களால் செதுக்கப்பட்ட 869 மயில்கள் வெவ்வேறு அளவிலும் வடிவத்திலும் தொகையை விரித்து நர்த்தனம் செய்யும் காட்சி பிரமிக்கத்தக்கது . ஆலயத்தின் நடுப்பகுதியில் தங்கத் தகடுகளால் இழைக்கப்பட்ட 11 அடி உயரம் கொண்ட பகவான் சுவாமி நாராயண மூர்த்தி ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது . அவருடைய குரு பரம்பரையான அக்க்ஷர்பிரம்மா குணாதி நந்த சுவாமிஜி , பக்ஷிஜி மகாராஜ் , சாந்திரிஜி மகாராஜ் , யோகிஜி மகாராஜ் , பிரமுக் சுவாமி மகாராஜ் ஆகியோரும் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளனர் .

பகவான் சுவாமி நாராயணன் 02.04.1781 ஆம் ஆண்டில் அயோத்யா மாநகரிலுள்ள சப்பைய்யா என்ற கிராமத்தில் பிறந்தார் . பாலபருவத்தில் இவர் கன்ஷ்யாம் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் . எட்டு வயதிலே கன்ஷ்யாமிற்கு உபநயனம் செய்வித்து வேத்சாலைக்கு அனுப்பப்பட்டார் . அங்கு சாஸ்திரங்கள் , புராணங்கள் , வேதங்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டார் . அவருடைய பத்தாவது வயதிலே சாஸ்திரங்களைப் பற்றி ஆன்மீகச் சிந்தனையோடு மக்களுடன் உரையாடினார் . பதினொன்றாவது வயதில் 1200 கிலோமீட்டர்களை கடந்து இமய மலையிலுள்ள மானசரோவர் வந்து சேர்ந்தார் . அங்கு கடும் தவம் புரிந்தார். அங்கிருந்து பல இடங்களுக்குப் பயணத்தை தொடங்கினார் . கடைசியில் குஜராத் மாநிலத்தில் லொஜ் என்ற இடத்தில் உள்ள ராமானந்த் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார் . ராமானந்த் சுவாமி அவருக்கு தீக்ஷை கொடுத்து சஜானந்த் சுவாமி என்ற பெயரையும் சூட்டினார் . ராமானந்த் சுவாமி மறைந்த பிறகு சஜானந்த் சுவாமி 21 வயதிலே ஆஸ்ரமத்திற்கு தலைமை வகித்தார் . அவர் சுவாமி நாராயணன் மகா மந்திரத்தை போதித்தார் . அதிலிருந்து அவர் பகவான் சுவாமி நாராயணன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் . தீண்டாமை , ஜாதிபிரச்ச்சனை , பெண் சிசுவதம் , உடன்கட்டை ஏறுதல் போன்ற தீய பழக்கங்களை எதிர்த்தார் . பகவான் சுவாமி நாராயணன் 49 ஆவது வயதில் இறைவனுடன் கலந்தார்.

சுவாமி நாராயணன் சந்நிதியில் கண்களை மூடிக்கொண்டு சற்று நேரம் தியானம் செய்தால் நம்மிடமிருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கின்றன. தூய்மையும் அமைதியும் நிலவும் இந்த சந்நிதியை சுற்றி ஆங்காங்கே சுவாமி நாராயணின் பருவ காலத்தை கட்டும் வகையில் பெரிய அளவில் புகைப்படங்கள் மாட்டப்பட்டு , அதனருகே அவரைப் பற்றிய விவரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன .

மேலும் இவ்வாலயத்தில் சீதாதேவி , லக்ஷ்மணர் , அனுமார் சமேதராக ஸ்ரீராமர் , ராதாகிருஷ்ணன் , சிவன்-பார்வதி , ஸ்ரீலக்ஷ்மி நாராயணர் ஆகிய மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர் . இந்த சந்நிதியில் பிரமாண்டமான கலையம்சம் மிக்க மேற்கூரைகள் பிரமிக்க வைக்கின்றன .இந்தக் கோவிலை தாங்கிக் கொண்டிருக்கும் 234 தூண்களிலும் விதவிதமான நர்த்தனம் செய்யும் சிற்பங்களைப் பார்க்கலாம் .

கற்களால் செதுக்கப்பட்ட 1070 யானை வடிவங்களை கொண்ட கஜேந்திர பீடமும் இந்தக் கோவிலில் இடம் பெற்றுள்ளது . 151 நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரால் நிரப்பப்பட்ட நாராயண் சரோவர் என்னும் நீர்நிலை கோவிலை சுற்றி இடம் பெற்றுள்ளது . இதில் குளிப்பவர்கள் சகல வியாதிகளும் குழப்பங்களும் நீங்கி , முகத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் பெற்றுச் செல்கிறார்கள் .

இதைத் தவிர, கோவிலுக்குள் சுரங்கப் பாதை அமைத்து கண்காட்சி சாலையும் அமைக்கப்பட்டுள்ளது . மேலும் சங்கீதத்தோடு இயங்கும் செயற்கை நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது . இரவு வேளையில் வண்ண மின் விளக்குகளின் ஜொலிப்பில் சங்கீதத்தோடு இயங்கும் செயற்கை நீரூற்றை பார்த்து ரசிக்கலாம் . மின் விளக்குகளின் பிரகாசத்தில் ஜொலிக்கும் இவ்வாலயத்தை இரவு நேரத்தில் பார்க்கும்போது தெய்வ லோகத்தில் இருப்பது போன்ற உணர்வை அனுபவிக்கலாம் .

புதுடில்லி செல்பவர்கள் சுவாமி நாராயணன் அக்க்ஷர்தாம் ஆலயத்தை அவசியம் தரிசியுங்கள் .

No comments:

Post a Comment