Tuesday, June 23, 2009

இந்தியர்கள் கொண்டாடும் முத்துமாரியம்மன் கோவில் - லண்டன்

101 பவுண்ட் நிதியோடு தொடங்கப்பட்ட சிவயோகம் அறக்கட்டளை சார்பாக லண்டன் மாநகரில் முத்துமாரி அம்மன் ஆலயம் எழுப்பப்பட்டது . முத்துமாரி கடல் தாண்டிக் காக்க வந்த கதை தெரியுமா ?

இந்தக் கோவிலை அமைப்பதற்கு முக்கிய காரியகர்த்தா நாகேந்திர சீவரத்தினம் என்பவர் ஆவார் . 1977 ஆம் ஆண்டில் இலங்கை , யாழ்ப்பாணத்திலுள்ள குளப்பிட்டியார் பொன்னுதுரை என்ற பெரியவர் சீவரத்தினத்திடம் , 'குல தெய்வத்திற்காக கர்ப்ப கிரகம் அமைக்கும் பொறுப்பு உனக்கு இருக்கிறது' என்று சொன்னார் . அந்தப் பெரியவருடைய வாக்கு பலித்தது . 1987 ஆம் ஆண்டில் நாகேந்திர சீவரத்தினம் லண்டன் வந்தபோது அங்கு எந்தவித திருக்கோவிலும் இல்லாததைக் கண்டார் . அங்குள்ள தமிழர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு திருக்கோவில் அமைக்க வேண்டுமென்று எண்ணினார் . ஆலயம் அமைத்து அதனை நிர்வகிக்க இங்கிலாந்து நாட்டின் சட்ட அமைப்பின் படி ஒரு அறக்கட்டளையை உருவாக்கினார் . அந்த அறக்கட்டளைக்கு 'சிவயோகம்' என்ற பெயரைச் சூட்டினார் . இந்த அறக்கட்டளைக்கு மூன்று அறங்காவலர்களையும் நியமித்தார் .

கோவிலுக்கு விக்ரகங்கள் செய்யும் பணியை ச்தபதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது . முதலில் பிரதான மூர்த்தியான முத்துமாரியம்மன் மூர்த்தியை வடித்து சீவரத்தினத்திடம் கொடுத்தார் . அதைக் கண்டு பேரானந்தம் அடைந்தார் . அவருக்கு 'அப்போது அம்பாள் வந்து சேர்ந்தால் , இனி எல்லாம் நல்லபடியாக அமையும் ' என்று இச்சினி சொல்வது போல ஒரு குரல் ஒலித்ததாம் .

05.04.1996-இல் சிவயோக அறக்கட்டளையின் மேற்பார்வையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து , அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் லண்டன் மாநகரிலே திறக்கப்பட்டது . சக்தி விநாயகர், சுப்ரமண்யர் , சீதை -லக்ஷமணன் -அனுமன் சகித ஸ்ரீராமர் , குருவாயூரப்பன் , லக்ஷ்மி , சரஸ்வதி , விஜயதுர்கை ஆகியோரின் சந்நிதிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டன . இவ்வாலயத்திற்கு அரசுப் பிரமாணமும் கிடைத்து , இன்றுவரை கோவிலை சிறப்பாக நடத்தி வருகிறார்கள் . ஆரம்பகாலத்தில் கோவிலுக்கு நிதி உதவியும் சரீர உதவியும் செய்ய முன்வந்தவர்கள் ஒருசிலரே . நாளடைவில் கோவில் வளர்ந்து வருடத்திற்கு இரண்டரை லட்சம் பவுண்டுகள் வருமானத்தை பெறுகிறது .

05-04-1996- இல் கும்பாபிஷேகம் நடைபெற்ற இவ்வாலயம் 2001-ஆம் ஆண்டில் ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து மகோத்சவ பெருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது . ஆண்டு முழுவதும் இந்த முத்து மாரியம்மன் கோவில் விழாக்கோலம் பூண்டிருக்கும் .

பிரதான மூர்த்தியாக அருள் தரும் அன்னை முத்துமாரியாம்ம்னக்கு சித்ரா பௌர்ணமியில் கொடியேற்றப்பட்டு 21 நாட்கள் மகோத்சவ பெருவிழா நடத்தப்படுகின்றது . இந்த மகோத்சவ பெருவிழாவில் தேர்த் திருவிழா , கரகத் திருவிழா , வேட்டைத் திருவிழா , சப்பரத் திருவிழா , ஊஞ்சல் திருவிழா, பூபல்லக் திருவிழா என்று பல திருவிழாக்கள் பக்தர்களால் நடத்தப்படுகிறது . வைகாசி விசாகத்தன்று 1008 சங்கு அபிஷேகம் நடைபெறுகிறது . ஆடிப்பூரத்தன்று 108 வலம்புரிச் சங்கு அபிஷேகத்தோடு லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது . நவராத்திரியில் அம்மன் கொலு மண்டப்பத்தில் காட்சி தருகிறாள் . பொங்கலன்று மிகச் சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது . இப்படி ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழாக் கோலம்தான் .

சக்தி விநாயகர் பெருமானுக்கு ஒவ்வொரு மாதத்திலும் வருகிற வளர்பிறை சதுர்த்தியில் சிறப்பு அபிஷேகமும் , ஆவணி சதுர்த்தியில் பத்து நாட்கள் அலங்காரத் திருவிழா நடைபெற்று வருகிறது . முருகப்பெருமானுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பத்து நாட்கள் அலங்காரத் திருவிழாவும் , கந்த்சஷ்டியின்போது ஆறு நாட்கள் திருவிழாவும் கோலாகலமாக நடைபெறும் .

சீதை , லக்ஷ்மணர், அனுமன் சகிதமாக வீற்றிருக்கும் ராமபிரானுக்கு ஏகாதசி மற்றும் ராம நவமியை அங்குள்ள தமிழர்கள் கோவிலில் ஒன்றுகூடி கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் . குருவாயூரப்பனுக்கு தேய்பிறை ஏகாதசியில் அபிஷேகமும் , கிருஷ்ணஜெயந்தியன்று உரியடியும் சிறப்பாக நடைபெறுகிறது .

ஆடி மாதத்தில் வரலக்ஷ்மி பூஜை , சுமங்கலிப் பூஜை , தை மாதம் கடைசி வெள்ளிகிழமையில் திருவிளக்கு பூஜையும் பிரமாதமாக நடைபெறுகிறது . இப்படி ஆண்டு முழுவதும் திருவிழாக் கோலத்தோடு அனைவருக்கும் அருள் புரிந்து கொண்டிருக்கும் முத்துமாரி அம்மனின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது . தங்கள் துன்பங்கள் நீங்க நாடிவரும் பக்தர்களுக்கு முத்துமாரி அம்மன் அருள் பொழிகிறாள் . குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதியர்கள் அம்பாள் சந்நிதியில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்கின்றனர் . அவர்களின் வேண்டுதல் பலித்து குழந்தை பாக்கியம் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வதைக் கண்கூடாகக் காணலாம் . லண்டன் மாநகரிலே வீற்றிருக்கும் அருள்மிகு முத்துமாரி அம்மன் அனைவரையும் காப்பாற்றுகிறாள் .

No comments:

Post a Comment